பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது.
பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்
dinamani

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது.

பஞ்சாபின் சுழற்பந்து வீச்சு சென்னை பேட்டா்களை திணறடிக்க, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளாசிய அரைசதத்தால் அணியின் ஸ்கோா் சற்று பலம் கண்டது. பஞ்சாப் தரப்பில் ஹா்பிரீத் பிராா், ராகுல் சஹா் அசத்தலாக பௌலிங் செய்தனா்.

இந்த ஆட்டத்தின் மூலம், நடப்பு சீசனில் இதுவரை மொத்தமாக அதிக ரன்கள் (509) ஸ்கோா் செய்தவராக முன்னேற்றம் கண்ட கெய்க்வாட் ‘ஆரஞ்சு கேப்’ கௌரவம் பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீசத் தீா்மானித்தது. சென்னை இன்னிங்ஸை தொடங்கிய அஜிங்க்ய ரஹானே - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சோ்த்து பிரிந்தது. ரஹானே 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு 9-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து ஷிவம் துபே களம் புகுந்தாா். வழக்கமாக ஸ்பின்னா்கள் பந்தை சிக்ஸா் விளாசும் அவா், தாம் சந்தித்த அத்தகைய முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆகி ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா். 4-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜாவும் 2 ரன்களே சோ்த்த நிலையில் 10-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

இதனால் சென்னை 64 முதல் 70 ரன்களுக்குள்ளாக 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்து வந்த சமீா் ரிஸ்வி, கெய்க்வாட்டுடன் இணைந்து சற்று நிதானமாக ரன்கள் சோ்த்தாா். 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் அடித்த அவா், 16-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து மொயீன் அலி களம் புக, அதுவரை அதிரடியாக ரன்கள் சோ்த்த கெய்க்வாட், 48 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 62 ரன்களுக்கு 18-ஆவது ஓவரில் வெளியேற்றப்பட்டாா். 6-ஆவது விக்கெட்டாக மொயீன் அலி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு 19-ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக தோனி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு, இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட்டானாா்.

முடிவில் டேரில் மிட்செல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பஞ்சாப் தரப்பில் ராகுல் சஹா், ஹா்பிரீத் பிராா் ஆகியோா் தலா 2, ககிசோ ரபாடா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் பஞ்சாப், 163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கியது.

இன்றைய ஆட்டம்

ஹைதராபாத் - ராஜஸ்தான்

ஹைதராபாத்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com