டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!
படம் | பிடிஐ

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு, அணியின் தேர்வு குறித்து கலவையான விமர்சனங்கள் வலம் வந்தன.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணித் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என விரிவாக பதிலளித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆச்சர்யமளிக்கும் வகையில் சிலர் அணியில் இடம்பெற்றபோதிலும், ஷுப்மன் கில் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங்
ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங்படம் | பிடிஐ

ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படாதது மிகவும் கடினமான முடிவு என அணித் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா படம் | பிடிஐ

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படாதது நாங்கள் கலந்தாலோசித்ததிலேயே மிகவும் கடினமான முடிவு. அவரது தரப்பில் எந்த ஒரு தவறும் இல்லை. ஷுப்மன் கில்லும் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அணியின் காம்பினேஷன் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அணியில் இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளது ரோஹித் சர்மாவுக்கு பந்துவீச்சுக்கான தெரிவுகளை அதிகப்படுத்தும். அதன் காரணமாக துரதிருஷ்டவசமாக அவர்கள் (ரிங்கு சிங் மற்றும் ஷுப்மன் கில்) ரிசர்வ் வீரர்களாக இருக்கின்றனர். அணியில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கடினமான சூழலில் இதனைத் தவிர்க்க முடியவில்லை என்றார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளனர். அதனால், இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேலையும் சேர்த்து 4 சுழற்பந்துவீச்சு தெரிவுகள் உள்ளன.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!
அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: எதற்காக இந்த மாதிரியான டி20 அணியைத் தேர்வு செய்தோம் என்பதில் மிகவும் ஆழமாக நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், எதிரணிகளின் கேப்டன்கள் இதனைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். எனக்கு அணியில் அதிக ஸ்பின்னர்கள் தேவைப்படுகின்றனர். உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் ஆடுகளங்களின் தன்மை எங்களுக்கு நன்றாகத் தெரியும். போட்டிகள் காலை 10-10.30 மணிக்குத் தொடங்குகிறது. அணியைத் தேர்வு செய்ததில் சில நுணுக்கங்கள் உள்ளது.

எனக்கு அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 வேகப் பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். அணியின் சமநிலையை உறுதிசெய்ய ஹார்திக் பாண்டியா அணியில் இருக்கிறார். அணியில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் (ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேல்) ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் (யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ்) பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இதனால் அணியில் சுழற்பந்துவீச்சு முழுமை பெற்றுள்ளது. எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதைப் பொறுத்து, யாரை களமிறக்க வேண்டும் என முடிவு செய்வோம்.

சுழற்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் நாங்கள் நிறைய ஆலோசனை மேற்கொண்டோம். துரதிருஷ்டவசமாக, வாஷிங்டன் சுந்தர் சமீப காலங்களில் அதிகமாக விளையாடவில்லை. அஸ்வினை தேர்வு செய்வதா அல்லதா அக்‌ஷர் படேலை தேர்வு செய்வதா என ஆலோசனை செய்தோம். அண்மைக் காலங்களில் அக்‌ஷர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சிறப்பான பந்துவீச்சு மற்றும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனின் தேவை என்பதை கருத்தில் கொண்டு அவரை அணியில் தேர்வு செய்தோம்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!
துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் அவர்கள் செயல்படுவதைப் போலவே டி20 உலகக் கோப்பையிலும் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். துரதிருஷ்டவசமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் ஷிவம் துபே பந்துவீசவே இல்லை. ஆனால், அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். அவர் அணிக்காக பந்துவீசும் சூழல் ஏற்பட்டால், சில ஓவர்களை வீச வைப்போம். ஹார்திக் பாண்டியாவும் சிறந்த பந்துவீச்சாளர். அணியின் தேவைக்கேற்ப அவரும் பந்துவீசுவார் என்றார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்படம் | ஐபிஎல்

அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கான இடத்துக்கு சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்படவில்லை.

கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்படாதது குறித்து அஜித் அகர்கர் கூறியதாவது: கே.எல்.ராகுல் மிகவும் அபாயகரமான வீரர். ஆனால், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வீரர்கள் எங்களுக்கு தேவைப்பட்டனர். ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், இந்த தருணத்தில் அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் சரியான தெரிவாக இருப்பார்கள் என நினைத்தோம் என்றார்.

விராட் கோலி
விராட் கோலி படம் | ஐபிஎல்

டி20 போட்டிகளில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும், ”டி20 போட்டிகளில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை” என்றனர்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிராஜ்.

ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com