ஜேக் பால் மற்றும் மைக் டைசன்
ஜேக் பால் மற்றும் மைக் டைசன்AP

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்திய இளைஞர்!

உலக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை யூடியூபரும் இளம் தலைமுறை குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால் வீழ்த்தியுள்ளார்.
Published on

உலக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கும், யூடியூபரும் இளம் தலைமுறை குத்துச்சண்டை வீரருமான ஜேக் பாலுக்கும் இடையே இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டசன் தோல்வியடைந்தார்.

58 வயதான உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் இதுவரை 58 போட்டிகளில் கலந்துகொண்டு 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில், 19 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வெற்றிபெற்ற இவர், இருமுறை உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

உலகமெங்கும் அறியப்படும் பிரபலமான குத்துசண்டை வீரரான இவர், கடந்த 19 ஆண்டுகளாக தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 27 வயதான ஜேக் பால் பிரபல யூடியூபராக அறியப்படுபவர். இவரை, யூடியூபில் 2.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபெறும் இவர், இதுவரை கலந்துகொண்ட 11 போட்டிகளில், 10 இல் வெற்றி பெற்றுள்ளார். அதில், 7 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றுள்ளார்.

இந்த நிலையில், மைக் டைசன் மற்றும் ஜேக் பாலுக்கு எதிரான குத்துச்சண்டை போட்டி இரு தலைமுறையைச் சேர்ந்த வீரர்களுக்கு எதிரான போட்டியாக உலகம் முழுக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. நீண்டநாள்கள் கழித்து மைக் டைசனை பாக்சிங் ரிங்குக்குள் பார்ப்பதற்கு அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

குத்துச்சண்டை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நேற்று (நவ. 10) போட்டியாளர்கள் இருவருக்கும் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் மைக் டைசன் முன்பு குரங்கு போல நடந்து வந்த ஜேக் பால், டைசனின் கால் விரலை மிதித்தார். உடனடியாக ஜேக் பால் கன்னத்தில் டைசன் அறைந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு குத்துச்சண்டைக் களத்திற்குள் பதிலடி இருக்குமென்று ஜேக் பால் கூறியிருந்தார்.

ஜேக் பாலை அறைந்த மைக் டைசன்
ஜேக் பாலை அறைந்த மைக் டைசன்Julio Cortez

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஆர்லிங்டன் ஏடி அண்ட் டி விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தனது பழைய கம்பீரத்துடன் குத்துச்சண்டை களத்தில் ஏறிய மைக் டைசன் போட்டி ஆரம்பித்த சில நொடிகளுக்கு தனது பாணியில் ஆக்ரோஷமாக குத்துகளை விட்டார். ஆனால், இளைஞரான ஜேக் பாலின் முன் அவருடைய ஆக்ரோஷம் வேலை செய்யவில்லை.

வயது மூப்பின் காரணமாக டைசனுக்கு விளையாடுவதில் சிரமம் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த நிலையில்,  8 சுற்றுகள் (தலா 2 நிமிடங்கள்) கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் துல்லியமாக விளையாடி அதிக குத்துகள் விட்ட ஜேக் பால் வெற்றி பெற்றார். மைக் டைசனை நாக் அவுட் செய்து வெற்றி பெறுவேன் என்று முன்பு கூறியிருந்த ஜேக் பாலால் அவரை நாக் அவுட் செய்ய முடியவில்லை.

ஆக்ரோஷமாக தாக்கும் மைக் டைசன்
ஆக்ரோஷமாக தாக்கும் மைக் டைசன்AP

இந்த போட்டிக்கான இறுதி புள்ளிகள் அறிவிப்பில் நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் வழங்கினர்.

போட்டி தொடங்கும் முன் பார்வையாளர்கள் இடையே மைக் டைசனுக்கு கிடைத்த வரவேற்பு அவர் தோற்றவுடன் விரக்தியாக மாறியது. ஜேக் பாலுக்கு எதிராகப் பலரும் கூச்சலிட்டனர். மேலும், போட்டி குறித்து சந்தேகத்தன்மை இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

போட்டி முடிந்து பேசிய ஜேக் பால், ”மைக் டைசன் எனக்கு முன்மாதிரி. அவரைப் போன்ற ஒரு லெஜண்ட்டுடன் போட்டியிட்டதை மரியாதைக்குரியதாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய மைக் டைசன், ஜேக் பால் நன்றாக விளையாடியதாகவும், தான் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்வேன் என்றும் தெரிவித்தார், இது தனது ஏழாவது தோல்வி என்று கூறிய அவர் அடுத்ததாக ஜேக் பாலின் சகோதரர் லோகன் பாலுடன் விளையாட ஆசைப்படுவதாக கூறினார்.

கடந்த ஜூலை 20 அன்று நடந்திருக்க வேண்டிய இந்தப் போட்டி டைசனின் உடல்நலக் கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com