இந்தியாவின் மிகப் பெரிய கவலை கௌதம் கம்பீர்தான்: முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் மிகப் பெரிய கவலை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

இந்திய அணியின் மிகப் பெரிய கவலை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் குறித்து அவர் பேசினார். ரிக்கி பாண்டிங் தொடர்பாக கௌதம் கம்பீர் பேசியது கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவின் மிகப் பெரிய கவலை

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகவும் கவலையளிக்கும் விதமாக இருக்காது எனவும், கௌதம் கம்பீரே இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக இருப்பார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

டிம் பெய்ன் (கோப்புப் படம்)
டிம் பெய்ன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கடந்த சுற்றுப்பயணங்களின்போது, இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டார். அவர் வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமான சூழலை உருவாக்கினார். வீரர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற அதீத ஆர்வத்தோடு விளையாடினர். இந்திய அணி தற்போது புதிய பயிற்சியாளரை (கௌதம் கம்பீர்) நியமித்துள்ளது. அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். அணிக்கு பயிற்சியளிக்கும் விதம் அதுவல்ல.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்கப்படும் எளிமையான கேள்விக்கு உணர்ச்சிவசப்படும் முதல் நபராக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இருந்தால், பெர்த் போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்ன ஆகப் போகிறது எனத் தெரியவில்லை. டெஸ்ட் தொடருக்காக நீண்ட நாள்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டியுள்ளது. இடையிடையே பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும்.

எளிய கேள்விகளுக்கு கௌதம் கம்பீர் உணர்ச்சிவசப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. ரிக்கி பாண்டிங்குக்கு எதிராக இன்னும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் வீரர் போல கௌதம் கம்பீர் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அவரது கருத்தினை தெரிவிக்க அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவரது கருத்து முக்கியமானதாக உள்ளதால் அதிகம் பேசப்படுகிறது.

விராட் கோலி ஃபார்மில் இல்லை என்பது இந்திய அணிக்கு கண்டிப்பாக கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால், என்னைப் பொருத்தவரை, தற்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்மைக் காட்டிலும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அழுத்தமான சூழலில் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதே இந்தியாவின் மிகப் பெரிய கவலையாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com