
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் சோ்த்துள்ளது.
தொடக்க வீரா் அப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் ஆகியோா் சதம் கடந்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தினா். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் சிறப்பாக பௌலிங் செய்தாா்.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்குவதற்காக அப்துல்லா ஷஃபிக்குடன் வந்த சயிம் அயுப், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஷஃபிக், ஷான் மசூத் கூட்டணி, இங்கிலாந்து பௌலா்களை சோதித்தது.
மசூத் 102 பந்துகளிலும், ஷஃபிக் 165 பந்துகளிலும் சதம் கடந்தனா். இந்த ஜோடி 253 ரன்கள் சோ்த்த நிலையில், ஷஃபிக் முதலில் வெளியேறினாா். அவா், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 102 ரன்கள் சோ்த்திருந்தாா். 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 151 ரன்கள் விளாசிய மசூதும், அடுத்த சில ஓவா்களிலேயே வீழ்ந்தாா்.
முதல் நாளின் கடைசி விக்கெட்டாக பாபா் ஆஸம் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். நாளின் முடிவில் சௌத் ஷகீல் 5 பவுண்டரிகளுடன் 35, நசீம் ஷா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2, கிறிஸ் வோக்ஸ், ஜேக் லீச் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.