
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில், இந்தியாவின் சுமித் அன்டில் போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதுதவிர, பாட்மின்டனில் தமிழகத்தின் நித்யஸ்ரீ சுமதி சிவனுக்கும், வில்வித்தை கலப்பு அணி பிரிவில் ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் இணைக்கும், தடகளத்தில் தீப்தி ஜீவஞ்சிக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதையடுத்து பதக்கப் பட்டியலில் இந்தியா, 16 பதக்கங்களுடன் முதல் 20 இடங்களுக்குள்ளாக வந்துள்ளது.
ஈட்டி எறிதல்
ஆடவர் ஈட்டி எறிதலில் எஃப்64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் 70.59 மீட்டருக்கு எறிந்து பாராலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இப்பிரிவில் கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் சுமித் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றதே பாராலிம்பிக் சாதனையாக இருந்த நிலையில், தற்போது தனது சாதனையை தானே முறியடித்து தங்கத்தையும் தக்கவைத்துள்ளார்.
இப்பிரிவில் உலக சாதனையும் (73.29 மீ) சுமித் வசமே இருப்பது நினைவுகூரத்தக்கது. நடப்பு உலக சாம்பியனுமான அவர், தற்போது தங்கம் வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரர், இரு பாராலிம்பிக் தங்கம் வென்ற 3-ஆவது இந்தியர் என்ற பெருமைகளைப் பெற்றுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா அடுத்தடுத்து தங்கம் வென்று முதல் இந்தியராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக்கில் இரு தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா (ஈட்டி எறிதல்), அவனி லெகாரா ஆகியோருடன் தற்போது சுமித்தும் இணைந்திருக்கிறார். இப்பிரிவில் களத்திலிருந்த மேலும் இந்தியர்களில், எஃப் 44 பிரிவில் சந்தீப் 62.80 மீட்டருடன் 4-ஆம் இடமும், சந்தீப் சஞ்ஜய் சர்கார் 58.03 மீட்டருடன் 7-ஆம் இடமும் பிடித்தனர்.
பாட்மின்டன்
மகளிருக்கான எஸ்ஹெச் 6 பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சுமதி சிவன் 21-14, 21-6 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ரினா மர்லினாவை தோற்கடித்து பதக்கத்தை வென்றார்.
இது அவருக்கு முதல் பாராலிம்பிக் பதக்கமாகும். நடப்பு பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3-ஆவது தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ ஆவார்.
முன்னதாக இதே பாட்மின்டனில் துளசிமதி முருகேசன், மனீஷா ராமதாஸ் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் பாட்மின்டனில் மட்டும் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வில்வித்தை
காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவு வெண்கலப் பதக்க சுற்றில், இந்தியாவின் ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் இணை 156-155 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் எலனோரா சார்தி/மேட்டியோ பொனாசினா கூட்டணியை "த்ரில்' வெற்றி கண்டு பதக்கத்தை தனதாக்கியது.
வில்வித்தையில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும்.
பாராலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கம். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார்.
இதனிடையே, ரீகர்வ் மகளிர் ஓபன் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பூஜா ஜத்யன் காலிறுதிச்சுற்றில் 4-6 என்ற கணக்கில் சீனாவின் வு சுன்யன்னிடம் தோல்வி கண்டார்.
தடகளம்
மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் டி20 பிரிவில் இந்தியாவின் தீப்தி ஜீவஞ்சி 55.82 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆம் இடத்துடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் உக்ரைனின் யூலியா ஷுலியர் (55.16'), துருக்கியின் அய்செல் ஆண்டர் (55.23') ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.
இத்துடன் நடப்பு பாராலிம்பிக் தடகளத்தில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 6-ஆக அதிகரித்துள்ளது.
ஏமாற்றம்
மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா இறுதிச்சுற்றில் 5-ஆம் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான மோனா அகர்வால் தகுதிச்சுற்றுடன் வெளியேறினார். மகளிர் குண்டு எறிதலில் எஃப்34 பிரிவில் இந்தியாவின் பாக்யஸ்ரீ ஜாதவ் தனது சிறந்த முயற்சியாக 7.28 மீட்டரை எட்டி 5-ஆம் இடம் பிடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.