இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இருதரப்பு தொடரில் ஜெர்மனியுடன் அக்டோபரில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடரின் 2 ஆட்டங்கள், அக்டோபர் 23, 24 தேதிகளில், தில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஹாக்கி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கடைசியாக இந்த இரு அணிகளும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதியில் சந்தித்தபோது, ஜெர்மனி 3-2 கோல் கணக்கில் வென்றது. அதில் தோற்ற இந்தியா, வெண்கலப் பதக்கச் சுற்றில் ஸ்பெயினை சாய்த்தது. சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்தியா 5-ஆவது இடத்திலும், ஜெர்மனி 2-ஆவது இடத்திலும் உள்ளன.
பலம் வாய்ந்த இந்த இரு அணிகளின் மோதல், ஹாக்கி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமென, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி தெரிவித்துள்ளார். இரு அணிகளும் இதுவரை 107 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில், இந்தியா 26 ஆட்டங்களிலும், ஜெர்மனி 54 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 27 ஆட்டங்கள் டிரா ஆகியிருக்கின்றன.