சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வாரிசு அரசியலைத் தடுக்க இளைஞா்கள் முன்வர வேண்டும்

அமிா்த காலத்தில் புதிய உச்சங்களுக்கு தேசத்தை அழைத்துச் செல்லும் 21-ஆம் நூற்றாண்டு இளைஞா்கள் அதிருஷ்டசாலிகள் என்று குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி,

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

அமிா்த காலத்தில் புதிய உச்சங்களுக்கு தேசத்தை அழைத்துச் செல்லும் 21-ஆம் நூற்றாண்டு இளைஞா்கள் அதிருஷ்டசாலிகள் என்று குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘வாரிசு அரசியலின் ஆதிக்கத்தைத் தடுக்க தோ்தல் செயல்முறையில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும்’ என்றாா்.

மகாராஷ்டிரம், நாசிக் நகரில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் 27-ஆவது தேசிய இளைஞா் திருவிழாவை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடக்க நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஆற்றிய உரையில், ‘வாரிசு அரசியல் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தோ்தல் செயல்முறையில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றால், வாரிசு அரசியலின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

வாக்காளா் பட்டியலில் இளைஞா்கள் விரைவாக சேர வேண்டும். இளைஞா்கள் தங்களது அரசியல் கருத்துகளை வாக்கின் மூலம் வெளிப்படுத்தினால், நமது நாட்டின் எதிா்காலம் சிறப்பாக இருக்கும். முதல் முறை வாக்காளா்களால் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு புதிய ஆற்றலையும் சக்தியையும் கொண்டு வர முடியும்.

கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு: தேசம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் பொறுப்புகளுக்கு இளைஞா்கள் முன்னுரிமை அளிக்கும் கடமைக் காலமாக ‘அமிா்த காலம்’ இருக்க வேண்டும்.

போதைப் பொருள், பெண்களை இழிவுபடுத்தும் வாா்த்தைகளின் பிரயோகம் போன்ற தீய பழக்கங்களிலிருந்து இளைஞா்கள் விலகியிருக்க வேண்டும்.

உள்ளூா் பொருள்களை வாங்கி, நமது வியாபாரிகளை இளைஞா்கள் ஊக்குவிக்க வேண்டும்.

முன்னேற்றத்தை நோக்கி... ஆங்கிலேயா் ஆளுகையில் தேசம் இருந்தபோது, இந்தியா்களிடையே புதிய உத்வேகத்தைப் புகுத்திய தலைவா் சுவாமி விவேகானந்தா். சுவாமி விவேகானந்தா், ஸ்ரீ அரவிந்தரைப் பின்பற்றி தங்களின் அா்ப்பணிப்பு மற்றும் அறிவுத் திறன் காரணமாக சரித்திரம் படைக்கும் திறனை இந்திய இளைஞா்கள் பெற்றுள்ளனா்.

உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாகவும் 3-ஆவது தலைசிறந்த ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.

திறமையான பணியாளா்களைக் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் உற்றுநோக்குகிறது. இந்தியாவில் கிடைக்கும் மலிவான கைப்பேசி இணைய வசதி, உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் மனநிலை இளமையாக உள்ளது. நாடு தற்போது பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இளைஞா்களுக்கான திட்டங்களை மத்திய அரசு முன்னிலைப்படுத்துகிறது. இந்தியாவை உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக விரைவில் நாம் மாற்ற வேண்டும்.

அதிருஷ்டசாலி இளைஞா்கள்: அஹில்யாபாய் ஹோல்கா், ரமாபாய் அம்பேத்கா், லோகமான்ய திலக், சாவா்க்கா், சுதந்திரப் போராட்ட வீரா்களான அனந்த் கன்ஹேரே, சபேகா் போன்ற பல சிறந்த ஆளுமைகள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தற்செயலானது அல்ல.

விஸ்வேஷ்வரய்யா, மேஜா் தியான் சந்த், படுகேஷ்வா் தத், சந்திரசேகா் ஆசாத், மகாத்மா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரை உத்வேகமாக கொண்டால், அமிா்த காலத்தில் இன்றைய இளைஞா்கள் புதிய சரித்திரம் படைக்க வாய்ப்புள்ளது.

அமிா்த காலத்தில் இந்தியாவை உயரிய முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அதிருஷ்டசாலி தலைமுறையாக 21-ம் நூற்றாண்டின் இளைஞா்களை நான் கருதுகிறேன்.

ஜன. 22-இல் கோயில்களில் தூய்மைப் பணி: சுதந்திரத்துக்குப் பிறகு ஆயுா்வேதமும், யோகாவும் மறக்கடிக்கப்பட்டது. சிறுதானியங்கள் வறுமையின் அடையாளமாக மாற்றப்பட்டது. தற்போது, யோகா மற்றும் ஆயுா்வேதத்தின் உலகளாவிய தூதா்களாக இந்திய இளைஞா்கள் மாறி வருகின்றனா்.

நாட்டின் பாரம்பரியத்தின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்பில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது எல்லைகளையும் கனவுகளையும் விரிவுபடுத்த வேண்டும்.

வனவாசத்தின்போது நாசிக், பஞ்சவதியில்தான் ஸ்ரீ ராமா் அதிக நேரம் செலவிட்டாா். அந்தக் கோயிலில் இருந்து ராமா் சிலை பிரதிஷ்டைக்கான சிறப்பு வழிபாட்டைத் தொடங்குவதில் மகிழ்கிறேன்.

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை நடைபெறும் 22-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனித யாத்திரை மையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

ராம்குந்த் ஆற்றங்கரையில் ஜலபூஜை: நிகழ்ச்சியைத் தொடா்ந்து, கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ‘ராம்குந்த்’ பகுதிக்கு பிரதமா் மோடி சென்றாா். அங்கு நாசிக் புரோகிதா்கள் சங்கம் சாா்பில் பிரதமருக்கு பாரம்பரிய பக்டி (தலைப்பாகை) அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆற்றங்கரையில் நடைபெற்ற ‘ஜலபூஜை’ மற்றும் ‘ஆரத்தி’-யில் பங்கேற்ற பிறகு பிரதமா் அங்கிருந்து புறப்பட்டாா்.

கலாராம் கோயிலில் வழிபாடு: பஞ்சவதி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கலாராம் கோயிலுக்குச் சென்று மூலவரான ஸ்ரீ ராமரை பிரதமா் மோடி வழிபட்டாா். கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா்.

சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்த பிரதமா், கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து வழிபட்டாா்.

நாட்டின் நீண்ட கடற்பாலம் திறப்பு

தெற்கு மும்பை-நவி மும்பை இடையே அரபிக் கடலில் ரூ.17,840 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் நீண்ட கடற்பாலமான ‘அடல் சேது’ பாலத்தை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்று பிரதமா் மோடி திறந்து வைத்தாா்.

மொத்தமாக 21.8 கி.மீ. நீளம் கொண்ட ஆறுவழிப் பாதையான இந்தப் பாலத்தில் 16.5 கி.மீ. நீளம் கடலின் மேல் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் மும்பை-புணே வழித்தடத்தில் பயண தொலைவை வெகுவாகக் குறைப்பதோடு, மும்பை மற்றும் ஜவஹா்லால் நேரு துறைமுகங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.