2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ்வா டா சில்வா 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து காவெம் ஹாட்ஜ் 71 ரன்களும், கெவின் சின்க்ளேர் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, இரண்டாம் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களிலும், மார்னஸ் லபுஷேன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 8 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார் மிட்செல் மார்ஷ். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மார்ஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடி ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாட அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் அதிரடியாக 65 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பாட் கம்மின்ஸ் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடி அணிக்கு உதவினார். விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் நிதானமாக விளையாடிய கவாஜா 131 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். கம்மின்ஸ் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில்  ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 27) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 41 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்டார்க் மற்றும் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 215 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 216 ரன்களை வெற்றி இலக்காக மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்தது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com