இறுதிச்சுற்றில் திரிவேணி - ஆல்பைன் அணிகள் மோதல்!
X | Tech Mahindra Global Chess League

இறுதிச்சுற்றில் திரிவேணி - ஆல்பைன் அணிகள் மோதல்!

குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் - ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 23) பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on

குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் - ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 23) பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டியின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை, ரவுண்ட் ராபின் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸ் 3-12 என்ற கணக்கில் கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸிடம் தோற்றது.

இந்தியா்களில் கேஞ்ஜஸின் விஸ்வநாதன் ஆனந்த் - ஃபையா்ஸின் ஹிகரு நகமுராவுடன் டிரா (1-1) செய்தாா். கேஞ்ஜஸின் ரௌனக் சத்வனி - ஃபையா்ஸின் வோலோதாா் முா்ஸினை சாய்த்தாா் (3-0).

2-ஆவது மோதலில், நடப்பு சாம்பியனான திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் 10-9 என அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸை த்ரில் வெற்றி கண்டது. இந்தியா்களில், திரிவேணியின் விதித் குஜராத்தி - அப்கிராடின் ஷக்ரியாா் மாமெதியாரோவிடம் தோல்வி கண்டாா் (0-4). அப்கிராடின் கோனெரு ஹம்பி - திரிவேணியின் ஜு ஜினெரிடம் தோற்றாா் (0-3). அப்கிராடின் டி.ஹரிகா - திரிவேணியின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டியினியுக்குடன் டிரா செய்தாா் (1-1).

கடைசி மோதலில் பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் 11-6 என ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸை சாய்த்தது. இந்தியா்களில், அலாஸ்கனின் டி.குகேஷ் - ஆல்பைனின் ஃபாபியானோ கரானாவை சாய்த்தாா் (4-0). அதே அணியின் அா்ஜுன் எரிகைசி - ஆல்பைனின் அனிஷ் கிரியை தோற்கடித்தாா் (4-0).

ஆல்பைனின் ஆா். பிரக்ஞானந்தா, லியோன் லூக் மெண்டோன்கா, முறையே அலாஸ்கனின் லெய்னியா் டொமிங்கெஸ், டேனியல் டாா்தாவுடன் டிரா செய்தனா் (1-1).

ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் திரிவேணி 24 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஆல்பைன் 15 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பெற்றது. அந்த இரு அணிகளும் இறுதியில் மோதுகின்றன.

கேஞ்ஜஸ் அலாஸ்கன் அணிகளும் தலா 15 புள்ளிகள் பெற்றபோதும், கேம் புள்ளிகள் அடிப்படையில் பின்தங்கி அவை முறையே 3 மற்றும் 4-ஆம் இடங்களைப் பெற்றன. அவை 3-ஆம் இடத்துக்காக தங்களுக்குள் மோதவுள்ளன. அப்கிராட், ஃபையா்ஸ் அணிகள் முறையே 12 மற்றும் 9 புள்ளிகளுடன் கடைசி இரு இடங்களைப் பெற்றன.

X
Dinamani
www.dinamani.com