
சாம்பியன்ஸ் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதிப் போட்டி பார்க் டெஸ் பிரின்சஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 2-1 என பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட்-ஜெர்மன்) வென்றது.
ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 3-1 என அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
இது குறித்து பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ’நாங்கள் லீக்கின் விவசாயிகள்’ எனப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லீக்கின் விவசாயிகள்
அவர் பேசியதாவது:
நாங்கள் லீக் ஆஃப் தி பார்மர்ஸ் (லீக்கின் விவசாயிகள்)தான். இல்லையா? ஆமாம், (சிரிக்கிறார்) நாங்கள்தான் லீக்கின் விவசாயிகள். பிரீமியர் லீக்கின் நான்கு அணிகளையும் வென்றுள்ளது நன்றாக இருக்கிறது.
ஆர்செனல் நன்றாக விளையாடினார்கள். ஆனால்...
போட்டிகளின் முடிவுகளுக்காக மகிழ்கிறோம். எங்களது அணியின் மனநிலை, எப்படி விளையாடுகிறோம் என்பதைக் குறித்து அணியில் உள்ள அனைவரும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்கிறோம். இதுவும் நன்றாக இருக்கிறது.
ஆர்செனல் நன்றாக விளையாடினார்கள். ஆனால், நாங்கள் அவர்களைவிட அதிகமாக கோல்கள் அடித்திருக்கிறோம். எங்களை இக்கட்டான நிலைக்கு ஆர்செனல் உள்ளாக்கினாலும் நாங்கள் இறுதிப் போட்டிக்குச் செல்லத் தகுதியானவர்கள்.
சிறந்த கோல்கீப்பர் இல்லாமல் எப்படி சாம்பியன்ஸ் லீக்கில் வெற்றிபெற முடியும். டிஃபென்சிலும் அசத்தினார்கள் என்றார்.
லீக்கின் விவசாயிகள் என்றால் என்ன?
உலகின் டாப் 5 கால்பந்து தொடர்களாக அறியப்படும் பிரிமீயர், லா லீகா, புன்டெஸ்லிகா, சீரிஸ் ஏ, லீக் 1 தொடர்களில் மிகவும் புகழ் குறைந்ததாக இருப்பது லீக்1 தொடர். இதில் விளையாடும் அணிகளை லீக் ஆஃப் தி பார்மர்ஸ் (லீக்கின் விவசாயிகள்) என கிண்டல் செய்வார்கள்.
இந்தத் தொடர்களில் விளையாடுவர்கள் காலையில் விவசாயம் பார்த்துவிட்டு மாலையில் கால்பந்து விளையாடுவது போல இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்வதைக் குறிப்பிட இந்த வார்த்தை புகழ்ப்பெற்றது.
இந்த லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி ஆதிக்கம் செலுத்துவதால் அந்த அணியை “லீக் ஆஃப் தி பார்மர்ஸ்” என கால்பந்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள்.
தற்போது, சாம்பியன்ஸ் லீக்கில் பிரிமீயர் லீக்கில் டாப் 4 அணிகளான லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்செனல், ஆஸ்டன் வில்லா ஆகிய அணிகளை பிஎஸ்ஜி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.