

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் அபிநவ் தேஷ்வால், பிரஞ்சலி பிரசாந்த் துமல் கூட்டணி 16-6 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவின் யா ஜு காவ், மிங் ஜுய் சு இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஈரானின் மஹ்லா சமீ, பிஜன் கஃபாரி ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது.
முன்னதாக தகுதிச்சுற்றிலும் அபிநவ், பிரஞ்சலி இணை 569 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. களத்திலிருந்த மற்றொரு இந்திய ஜோடியான அனுயா பிரசாத், ருதர் வினோத் குமார் 553 புள்ளிகளுடன் 7-ஆம் இடமே பிடித்து, தகுதிச்சுற்றுடன் வெளியேறினர். அபிநவ் மற்றும் பிரஞ்சலிக்கு இந்தப் போட்டியில் இது 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே தனிநபர் பிரிவில் அவர்கள் வெள்ளி வென்றது நினைவுகூரத்தக்கது.
50 மீட்டர் ரைஃபிள் புரோன் ஆடவர் தனிநபர் பிரிவில், குஷாக்ரா சிங் ரஜாவத் 224.3 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். அதில், உக்ரைனின் டிமிட்ரோ பெட்ரென்கோ 251 புள்ளிகள் பெற்று உலக மற்றும் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, ஜெர்மனியின் காலின் முல்லர் 245.4 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார்.
இந்த டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 11-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.