கிராண்ட் செஸ் டூர்: பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்து...

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (ஜிசிடி) ஃபைனல்ஸ் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
இதன் மூலமாக, ஜிசிடி ஃபைனல்ஸ் போட்டியின் வரலாற்றில் சாம்பியனான முதல் இந்தியராக அவர் வரலாறு படைத்தார். இறுதிச்சுற்றின் தொடக்கத்தில் தோல்வியுடன் தடுமாறிய பிரக்ஞானந்தா, அடுத்தடுத்த கேம்களில் மீண்டு வந்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்.
2-ஆவது சாதனை: ஏற்கெனவே நடப்பாண்டு தொடக்கத்தில் நார்வே செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியனான இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தா, தற்போது அதற்கு நிகரான மற்றொரு வரலாறையும் படைத்திருக்கிறார்.
இதற்கு முன் கிராண்ட் செஸ் டூரில் பிரக்ஞானந்தா 4-ஆம் இடம் (2025) பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்தியாவிலிருந்து பிரக்ஞானந்தா தவிர, 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
விஸ்வநாதன் ஆனந்த் 2018-இல் 5-ஆம் இடம் பிடித்ததே, பிரக்ஞானந்தா தவிர்த்து மற்றொரு இந்தியர் பெற்ற அதிகபட்ச இடமாக உள்ளது.
ஜிசிடி செஸ்: கிராண்ட் செஸ் டூர் போட்டியானது, கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. ஒரு ஆண்டின் அட்டவணையில் இறுதிச்சுற்று உள்பட 6 போட்டிகள் நடைபெறும். 3 ரேப்பிட் & பிளிட்ஸ் கேம் போட்டிகள், 2 கிளாசிக்கல் கேம் போட்டிகள் என, மொத்தமாக 5 போட்டிகள் விளையாடப்படும்.
இந்தப் போட்டிக்கு மொத்தம் 9 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 3 பேர், முந்தைய ஆண்டு 'டாப் 3' இடத்தைப் பிடித்தவர்களாக இருக்க, எஞ்சிய 6 பேர் ஃபிடே தரவரிசை உள்பட சில தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அட்டவணையின் 5 போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்போர், ஜிசிடி ஃபைனல்ஸ் எனப்படும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுவர். கிளாசிக்கல், ரேப்பிட், பிளிட்ஸ் கேம்கள் அடங்கியதாக இறுதிச்சுற்றுக்கு இருக்கும்.
முன்னேற்றம்: அந்த வகையில் நடப்பாண்டு சீசனில் 5 போட்டிகளின் முடிவில், இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, வெஸ்லி சோ, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகிய 4 பேர் ஜிசிடி ஃபைனல்ஸýக்குத் தகுதிபெற்றனர். அதில் அரையிறுதிச்சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா - கரானா இறுதிச்சுற்றுக்கு முன்னேற, வெஸ்லி - கீமர் 3-ஆவது இடத்துக்கான சுற்றில் களமாடினர்.
இரு சுற்றுகளுமே, 2 கிளாசிக்கல் கேம்கள், 2 ரேப்பிட் கேம்கள், 4 பிளிட்ஸ் கேம்களை உள்ளடக்கியதாக நடைபெற்றது. இதில் இறுதிச்சுற்றில் முதல் கிளாசிக் கேமில் கரானாவிடம் தோல்வி கண்ட பிரக்ஞானந்தா, 2-ஆவது கேமை டிரா செய்தார். இதையடுத்து 3-9 என கரானாவிடம் அவர் பின்தங்கியிருந்தார்.
மீண்டு வந்து வெற்றி: போட்டியின் கடைசி கட்டமாக, ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் கேம்கள் அனைத்தும் இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றன. இதில் பிரக்ஞானந்தா இரு ரேப்பிட் கேம்களிலுமே கரானாவை வெல்ல, 11-9 என அவர் முன்னிலை பெற்றார்.
பின்னர் விளையாடிய பிளிட்ஸ் கேம்களில், முதல் கேம் டிரா (12-10) ஆக, அடுத்த கேமில் கரானா வென்று, ஸ்கோரை சமன் (12-12) செய்தார். ஆனால் மீண்டு வந்த பிரக்ஞானந்தா, 3-ஆவது கேமில் வென்று (14-12) முன்னிலை பெற்றார்.
கடைசி கேம் டிரா ஆக, முடிவில் பிரக்ஞானந்தா 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
3-ஆம் இடம்: போட்டியில் 3-ஆவது சுற்றுக்கான மோதலில், அமெரிக்காவின் வெஸ்லி சோ 18-12 என ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினார்.
அடுத்த சீசன்: போட்டி விதிகளின்படி, இந்த சீசனில் முதல் 3 இடங்களைப் பிடித்த பிரக்ஞானந்தா, கரானா, வெஸ்லி ஆகிய மூவருமே, அடுத்த ஆண்டு கிராண்ட் செஸ் டூர் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
ரூ.1.90 கோடி பரிசு
சாம்பியனான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.1.90 கோடி ரொக்கப் பரிசாகக் கிடைக்க, கரானா ரூ.1.19 கோடியை பெற்றார்.
வெஸ்லிக்கு ரூ.71 லட்சமும், கீமருக்கு ரூ.47 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.
வாழ்த்து
கிராண்ட் செஸ் டூர் சாம்பியனாகி சாதனை படைத்துள்ள சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு, முதல்வர் ஜோசப் விஜய், மாநில விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Summary
R Praggnanandhaa creates history becomes the first Indian player to win the Grand Chess Tour
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




