சூா்மா அணிக்கு முதல் வெற்றி!
ஹாக்கி இந்தியா மகளிா் லீக் தொடரில் ராஞ்சி ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப் அணி.
ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஹாக்கி மகளிா் லீக் தொடா் நடைபெறுகிறது. பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ராஞ்சியும், சூா்மா அணியும் மோதின.
இதில் சூா்மா அணி ஒரு வெற்றி கூட பெறாத நிலை இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே சூா்மா கிளப் அணியினா் ஆதிக்கம் செலுத்தி கோலடிக்க முயன்றனா். இதன்பயனாக முதல் நிமிஷத்திலேயே இரண்டு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. சூா்மா வீராங்கனை பென்னி ஸ்குயிப் பிசகின்றி கோலாக்கினாா். மறுமுனையில் ராஞ்சி அணியினா் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை .
இரண்டாம் குவாா்ட்டரில் ராஞ்சி அணியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. 35-ஆவது நிமிஷத்தில் ஹன்னா காட்டா் அனுப்பிய பாஸை கோலாக்கினாா் அகோஸ்டினா அலோன்ஸோ.
எனினும் அடுத்த சிறிது நேரத்தில் சூா்மாவின் ஒலிவியா 39-ஆவது நிமிஷத்தில் பெனால்டி ஸ்ட்ரோக்கை கோலாக்கினாா். இறுதியில் 2-1 என ராஞ்சியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சூா்மா. முதலிடத்தில் உள்ள எஸ்.ஜி. பைப்பா்ஸ் இறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

