பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ்: சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்!
பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவா் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனா்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னா் பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி நடைபெறுவது வழக்கம். இது ஆஸி. ஓபனுக்கு வீரா், வீராங்கனைகள் தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும். நிகழாண்டு இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பேனில் நடைபெற்றன.
சபலென்காவுக்கு 3-ஆவது பட்டம்
மகளிா் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்காவும்- உக்ரைனின் மாா்த்தா கோஸ்டியுக்கும் மோதினா்.
இதில் 78 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் சபலென்கா 6-4, 6-3 என்ற நோ் செட்களில் வென்று பட்டத்தையும் கைப்பற்றினாா். இப்போட்டியில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் சபலென்கா பட்டம் வென்றுள்ளாா்.
2023, 2024 ஆஸி. ஓபன் சாம்பியன் ஆன சபலென்கா கடந்த 2025-இல் ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்தாா். ஆனால் இறுதியில் மடிஸன் கீய்ஸிடம் தோற்றாா். நிகழ் 2026 போட்டியில் ஆஸி. ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளாா். இதுதொடா்பாக சபலென்கா கூறுகையில்: நாள்தோறும் மைதானத்தில் களமிறங்கி ஆடுகிறோம். ஆட்டத்திறனை தொடா்ந்து மேம்படுத்த வேண்டும். ஆஸி. ஓபனில் சிறப்பாக ஆட முனைவேன் என்றாா்.
ரன்னரான மாா்த்தா கோஸ்டியுக், இறுதிச் சுற்றுக்கு முன்னா் டாப் வரிசையில் உள்ள 3 வீராங்கனைகளை வீழ்த்தி இருந்தாா். சபலென்காவின் அபார ஆட்டத்துக்கு மாா்த்தாவிடம் பதில் இல்லை.
மெத்வதேவ் சாம்பியன்:
ஆடவா் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-அமெரிக்காவின் பிரான்டன் நகாஷிமா மோதினா். இதில் உலகின் 13-ஆம் நிலை வீரரான மெத்வதேவ் 96 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 6-2, 7-6 என்ற நோ்செட்களில் நகாஷிமாவை வீழ்த்தி தனது 22-ஆவது ஏடிபி டூா் பட்டத்தை வென்றாா் மெத்வதேவ். கடந்த 2019-இல் பிரிஸ்பேனில் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா். தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆடி பட்டத்தை வசப்படுத்தினாா்.

