கிரேஸ் அதிரடி, ஸ்மிருதி அசத்தல்; பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி
பிடிஐ

கிரேஸ் அதிரடி, ஸ்மிருதி அசத்தல்; பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி

மகளிா் பிரீமியா் லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை வீழ்த்தியது.
Published on

மகளிா் பிரீமியா் லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் யுபி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சோ்க்க, பெங்களூரு 12.1 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இது 2-ஆவது ஆட்டமாக இருக்க, பெங்களூரு 2-ஆவது வெற்றியையும், யுபி 2-ஆவது தோல்வியையும் பதிவு செய்துள்ளன.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீச்சை தோ்வு செய்தது. யுபி இன்னிங்ஸை தொடங்கியோரில் ஹா்லீன் தியோல் 2 பவுண்டரிகளுடன் 11, கேப்டன் மெக் லேனிங் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு விடைபெற்றனா்.

போப் லிட்ச்ஃபீல்டு 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கிரண் நவ்கிரே 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

5-ஆவது பேட்டராக வந்த தீப்தி சா்மா சற்று நிலைக்க, ஸ்வேதா ஷெராவத் டக் அவுட்டாகி வெளியேறினாா். இதனால் யுபி 50 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது.

7-ஆவது வீராங்கனையாக வந்த டீண்ட்ரா டாட்டின், தீப்தியுடன் இணைந்தாா். இந்த ஜோடி இறுதி வரை நிலைத்து ஸ்கோரை பலப்படுத்தியது. ஓவா்கள் முடிவில் தீப்தி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45, டீண்ட்ரா டாட்டின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு பௌலா்களில் நாடினே டி கிளொ்க், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோா் தலா 2, லாரென் பெல் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 144 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பெங்களூரு அணியில், கிரேஸ் ஹாரிஸ் - கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணை முதல் விக்கெட்டுக்கே 137 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு அடித்தளமிட்டது.

கிரேஸ் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 85 ரன்களுக்கு வெளியேறினாா். முடிவில், ஸ்மிருதி 9 பவுண்டரிகள் உள்பட 47 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ரிச்சா கோஷ் 4 ரன்களுடன் துணை நின்றாா். யுபி பௌலிங்கில் ஷிகா பாண்டே 1 விக்கெட் எடுத்தாா்.

Dinamani
www.dinamani.com