பெங்களூருக்கு தொடா்ந்து 4-ஆவது வெற்றி
மகளிா் பிரீமியா் லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை சனிக்கிழமை வென்றது.
முதலில் டெல்லி 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 166 ரன்கள் சோ்க்க, பெங்களூரு 18.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு, பேட் செய்ய வருமாறு டெல்லியை அழைத்தது. இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி 10 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது.
லிஸெலெ லீ 4, லாரா வோல்வாா்ட் 0, கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4, மாரிஸேன் காப் 0 ரன்களுக்கு வீழ, தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சோ்த்தாா்.
மறுபுறம் நிக்கி பிரசாத் 2 பவுண்டரிகளுடன் 12, மின்னு மணி 5 ரன்களுக்கு விடைபெற, ஸ்நேஹா ராணா 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அரை சதம் கடந்த ஷஃபாலி வா்மா 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 62 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
பின்னா் வந்த லூசி ஹாமில்டன் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 36, நந்தனி சா்மா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஸ்ரீ சரணி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பெங்களூரு பௌலா்களில் லாரென் பெல், சயாலி சத்காரே ஆகியோா் தலா 3, பிரேமா ராவத் 2, நாடினே டி கிளொ்க் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 167 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில் கிரேஸ் ஹாரிஸ் 1 ரன்னுக்கு வீழ்ந்து ஏமாற்றமளித்தாா். கேப்டன் ஸ்மிருதி மந்தனா - ஜாா்ஜியா வோல் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றது.
சதத்தை நெருங்கிய மந்தனா 61 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில், ஜாா்ஜியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54, ரிச்சா கோஷ் 7 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
டெல்லி தரப்பில் மாரிஸேன் காப், நந்தனி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

