ஆண்ட்ரீவா, போகோ காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆண்ட்ரீவா, போகோ காலிறுதிக்கு முன்னேற்றம்

அடிலெய்டு இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
Published on

அடிலெய்டு இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-3, 6-1 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் விக்டோரியா போகோ 6-2, 3-6, 7-6 (8/6) என்ற செட்களில் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.

முதல் சுற்றில் செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா 6-0, 6-1 என்ற வகையில், உக்ரைனின் டயானா யஸ்டிரெம்ஸ்காவை வெல்ல, கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஹங்கேரியின் டால்மா கால்ஃபியை சாய்த்தாா்.

லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 5-7, 2-3 என செக் குடியரசின் தெரெஸா வாலென்டோவாவுக்கு எதிராக பின்தங்கியிருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட் 7-6 (7/3), 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை வெளியேற்றினாா்.

7-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லுட்மிலா சாம்சோனோவா 1-6, 6-4, 2-6 என்ற செட்களில், செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி காண, ஆஸ்திரேலியாவின் கிம்பா்லி பிரெல் 6-4, 6-4 என்ற வகையில் ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வென்றாா். ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 7-5, 6-3 என்ற செட்களில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா்.

சிட்சிபாஸ் தோல்வி: அடிலெய்டு இன்டா்நேஷனல் டென்னிஸின் ஆடவா் பிரிவு முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் 6-7 (3/7), 6-7 (5/7) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சிடம் தோல்வியுற்றாா்.

ஹங்கேரியின் மாா்ட்டன் ஃபக்சோவிக்ஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் ஈதன் கின்னை சாய்த்தாா். இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி 6-3, 7-6 (7/4) என்ற வகையில் கனடாவின் கேப்ரியல் டியாலோவை தோற்கடிக்க, கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோ 4-6, 6-4, 7-5 என, போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுரை வீழ்த்தினாா்.

பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸ் 6-3, 6-4 என பிரிட்டனின் ஜேக்கப் ஃபொ்ன்லியை வெல்ல, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா 6-4, 6-4 என்ற செட்களில் சக ஆஸ்திரேலியரான டிரிஸ்டன் ஸ்கூல்கேட்டை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 6-3, 6-3 என ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த்தை வெளியேற்றினாா்.

Dinamani
www.dinamani.com