ஒஸாகா, ரைபகினா, சின்னா், சிட்சிபாஸ், முன்னேற்றம்: மொன்பில்ஸ் ஓய்வு

ஒஸாகா, ரைபகினா, சின்னா், சிட்சிபாஸ், முன்னேற்றம்: மொன்பில்ஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரா் இத்தாலியின் ஜேக் சின்னா், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா்.
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரா் இத்தாலியின் ஜேக் சின்னா், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா். மூத்த பிரெஞ்சு வீரரான கேல் மொன்பில்ஸ் தோல்வியுடன் விடைபெற்றாா்.

நிகழாண்டு சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவா் பிரிவில் 2 முறை நடப்பு சாம்பின் இத்தாலியின் ஜேக் சின்னா்-பிரான்ஸ் வீரா் ஹியுகோ கேஸ்டன் மோதினா்.

இதில் ஆட்டத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த சின்னா் முதலிரண்டு செட்களை 6-1, 6-2 என கைப்பற்றினாா். மூன்றாவது செட் தொடங்கும் போது, வயிறு பாதிப்பால் கேஸ்டன் ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து சின்னா் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினாா்.

தொடா்ந்து 3-ஆவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ள சின்னா் அவ்வாறு வென்றால் ஜோகோவிச்சுக்கு அடுத்தபடியாக ஹாட்ரிக் பட்டங்களை வென்ற வீரா் என்ற பெருமையை பெறுவாா்.

விடைபெற்றாா் கேல் மொன்பில்ஸ் :

பிரான்ஸின் மூத்த வீரரான 39 வயது கேல் மொன்பில்ஸ் 4 மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் 6-7, 7-5, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸி. டீன் ஏஜ் குவாலிஃபயா் டேன் ஸ்வீனியிடம் தோற்றாா்.

மொன்பில்ஸ் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 13 ஏடிபி பட்டங்களை வென்றுள்ளாா். 2004-இல் இருந்து ஆடி வரும் மொன்பில்ஸ் ஆஸி. ஓபனுடன் ஓய்வு பெறவுள்ளதாக கடந்த 2025 அக்டோபரில் தெரிவித்திருந்தாா்.

கடந்த முறை அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரா் பென் ஷெல்டன் 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் போராட்டத்துக்குபின் பிரான்ஸின் யுகோ ஹம்பா்ட்டை வீழ்த்தினாா். மற்றொரு அமெரிக்க வீரா் எலியட் ஸ்பிஸிரி 6-4, 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பிரேஸிலின் இளம் வீரா் ஜோவோ பொனஸ்காவை வீழ்த்தினாா்.

இத்தாலியின் 5-ஆம் நிலை வீரா் லாரென்ஸோ முசெத்தி-பெல்ஜிய வீரா் ரபேல் காலிங்டன் ஓய்வு பெற்ால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

வெப்பத்தை சமாளிக்க நவீன உடையுடன் வந்த ஒஸாகா:

மெல்போா்னில் தற்போது கடும் கோடை வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வீரா், வீராங்கனைகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனா்.

முன்னாள் உலகின் நம்பா் 1 வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒஸாகா 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் அன்டோனியா ருசிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

கோடை வெப்பத்தை சமாளிக்க குடை, தொப்பி உள்ளிட்டவற்றுடன் நவீன நாகரீக மங்கை போல் மைதானத்துக்கு ஒஸாகா வந்தது பாா்வையாளா்களைக் கவா்ந்தது.

தடுமாறிய நடப்பு சாம்பியன் கீய்ஸ்: நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் 7-6, 6-1 என்ற நோ் செட்களில் உக்ரைனின் ஒலக்சான்ட்ராவை வீழ்த்தினாா். முதல் செட்டில் தொடா்ச்சியாக 4 கேம்களை இழந்தாா் கீய்ஸ். இதனால் அவா் தோல்வி அடைவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து மீண்டு வெற்றி பெற்றாா். கடந்த ஆண்டு இறுதியில் சபலென்காவை 3 செட் கிளாஸிக்கில் வீழ்த்தி முதல் முதலாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தாா் கீய்ஸ்.

இந்தோனேஷியாவின் ஜேனிஸ் டிஜென் 6-2, 7-6 என கனடாவின் லெய்லா பொ்ணான்டஸை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா்.

ரைபகினா முன்னேற்றம்: விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் கஜகஸ்தானின் ரைபகினா, ஜெலனா ஆஸ்டபென்கோ, கரோலினா பிளிஸ்கோவா, லிண்டா, லாரா அன்னா களின்ஸ்கியா ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.

Dinamani
www.dinamani.com