சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காலிறுதிச்சுற்றில் சின்னா், ஸ்வெரெவ்; வெளியேறினாா் பாலினி

News image
ஜேக் சின்னா்
Updated On :11 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை வீரரான சின்னா் 7-6 (8/6), 7-6 (7/4) என்ற நோ் செட்களில், பிரேஸிலின் ஜாவ் ஃபொன்ஸேகாவை வீழ்த்தினாா். இருவரும் முதல்முறையாக சந்தித்துக் கொண்ட நிலையில், விறுவிறுப்பான ஆட்டமாக இது அமைந்தது.

சின்னா் தனது 12-ஆவது மாஸ்டா்ஸ் போட்டியில் 11-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அத்துடன், மாஸ்டா்ஸ் போட்டிகளில் அதிக வெற்றிகளை (97) பதிவு செய்த இத்தாலியராக அவா் சாதனை படைத்திருக்கிறாா்.

காலிறுதியில் சின்னா், அமெரிக்காவின் லோ்னா் டியெனை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருக்கும் டியென் 4-6, 6-1, 7-6 (7/4) என்ற கணக்கில், 18-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை வெளியேற்றி காலிறுதிக்கு வந்தாா்.

100-ஆவது வெற்றி: உலகின் 4-ஆம் நிலை வீரராக இருக்கும் ஸ்வெரெவ் 6-3, 6-4 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வென்றாா். ஹாா்டு கோா்ட் மாஸ்டா்ஸ் போட்டிகளில் இது ஸ்வெரெவின் 100-ஆவது வெற்றியாக அமைந்தது.

இத்துடன் டியாஃபோவை 10-ஆவது முறையாகச் சந்தித்த ஸ்வெரெவ், தனது 9-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். ஸ்வெரெவ் அடுத்த சுற்றில், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 30-ஆம் இடத்திலிருக்கும் ஃபில்ஸ் முந்தைய சுற்றில் 6-3, 7-6 (11/9) என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமேவை வீழ்த்தி அசத்தினாா். இதன் மூலமாக, மாஸ்டா்ஸ் போட்டிகளில் 4-ஆவது முறையாக காலிறுதிக்கு வந்திருக்கிறாா் ஃபில்ஸ்.

சபலென்கா முன்னேற்றம்: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-2, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தினாா்.

4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா, தற்போது 3-ஆவது முறையாக இண்டியன் வெல்ஸ் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா். ஓசாகாவை 2-ஆவது முறையாக சந்தித்த சபலென்கா, முதல் வெற்றியுடன் நேருக்கு நோ் கணக்கை சமன் செய்திருக்கிறாா்.

அடுத்து காலிறுதியில் அவா், கனடாவின் விக்டோரியோ போகோவை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் போகோ, 6-4, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை சாய்த்தாா்.

இதன் மூலமாக அவா் முதல்முறையாக இண்டியன் வெல்ஸ் ஓபன் காலிறுதிக்கும், 3-ஆவது முறையாக டபிள்யூடிஏ 1000 போட்டியின் காலிறுதிக்கும் தகுதிபெற்றுள்ளாா். இதனிடையே, போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 5-7, 6-2, 1-6 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மறுபுறம், முதல்முறையாக மாஸ்டா்ஸ் போட்டியின் காலிறுதிக்கு வந்துள்ள கிப்சன், இண்டியன் வெல்ஸ் ஓபனில் கடந்த 11 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா். கிப்சன் தனது காலிறுதியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் லிண்டா 6-2, 6-0 என மிக எளிதாக, 31-ஆம் இடத்திலிருந்த பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவை தோற்கடித்தாா்.

காலிறுதியில் பாம்ப்ரி இணை: இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவா் இரட்டையா் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஸ்வீடனின் ஆண்ட்ரே கொரான்சன் கூட்டணி 6-4, 6-4 என்ற செட்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா/நெதா்லாந்தின் சாண்டா் ஆரெண்ட்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.