ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை கோப்பை வென்ற பிரேசிலை தோற்கடித்து நார்வே அணி வெற்றிபெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் இரு கோல்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
நார்வேயின் ’வைக்கிங்ஸ் ரோ’!
வெற்றிபெற்ற பின் நார்வே அணி வீரர்கள் ’வைக்கிங்ஸ் ரோ’ என்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி நார்வே முழுவதும் ரசிகர்கள் பொதுவெளியில் ‘வைக்கிங்ஸ் ரோ’ வெற்றிக் கொண்டாட்டத்தைச் செய்தனர்.
வெற்றிக்குப் பின்னர் கால்பந்து மைதானத்தில் நார்வே அணி வீரர்கள் வரிசையாக படகிற்கு துடுப்புப் போடுவதைப் போன்று அமர்ந்து கொண்டனர். எர்லிங் ஹாலண்ட் ரசிகர்களின் முரசை வாங்கி அணி வீரர்களின் முன் நின்று அதனை அடித்தார். அவர் முரசடித்த போது, அணி வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் ‘ரோ, ரோ’ என சத்தமிட்டுக் கொண்டே படகிற்கு துடுப்பு செலுத்துவதைப் போன்று வெற்றியைக் கொண்டாடினர். ’ரோ’ என்றால் நார்வீஜியன் மொழியில் துடுப்பு செலுத்துதல் என்று பொருள்.
இதற்கு முந்தைய போட்டிகளிலும் இந்தக் கொண்டாட்டங்கள் இருந்தபோதும் பிரேசிலைத் தோற்கடித்த இந்தப் போட்டி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
இந்தக் கொண்டாட்டத்திற்கு நார்வேயின் வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற வைக்கிங்ஸ் வீரர்கள் காரணமாகச் சொல்லப்படுகின்றனர்.
வைக்கிங்ஸ் - நார்வே தொடர்பு!
ஸ்காண்டிநேவியன் நாடுகள் எனச் சொல்லப்படும் இன்றைய நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கடற்படை வீரர்கள் ‘வைக்கிங்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர்.
வைக்கிங்ஸ் வீரர்களின் மிகப்பெரிய பலமாகச் சொல்லப்படுவது அவர்களின் லாங்போட் எனப்படும் நீளமான படகுகள். கடல் கடந்து போருக்குச் செல்லும் இவர்கள் அதற்கு ஏற்றவாறு மிகவும் உறுதியான கட்டுமானத்துடன் எந்தச் சூழலையும் தாங்கும் விதமாக இந்த வகைப் படகுகளை வடிவமைத்தனர். அந்தப் படகுகளைக் கடலில் செலுத்த வீரர்கள் அனைவரும் படகினுள் அமர்ந்து ஒரே நேரத்தில் துல்லியமாக துடுப்புகளைச் செலுத்துவார்கள்.
28 ஆண்டுகளுக்குப் பின்னர் நார்வே அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ஓலே ஃப்ராய்ஸ்டாட் என்ற ரசிகர் 2025-ல் இந்த வைக்கிங் ரோ கொண்டாட்டத்தை வைரலாக்கினார். நார்வே மக்களின் முன்னோர்களான வைக்கிங்ஸ் வீரர்களின் ஒற்றுமை மற்றும் வீரத்தைக் குறிப்பிடும் வகையில் இந்தக் கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வைக்கிங்ஸ் வீரர் ஹாலண்ட்!
எர்லிங் ஹாலண்ட் முன் நின்று முரசடித்து இந்தக் கொண்டாடத்தைச் செய்தது உலகளவில் வைரலாகியுள்ளது. வைக்கிங்ஸ் வீரர்களில் தலைமை தாங்குபவர் படகில் முரசடித்து முன்னெடுத்துச் செல்வதைப் போன்று ஹாலண்ட் முரசடித்தார்.
நார்வே அணியின் கேப்டனாக மார்ட்டின் ஓடேகார்ட் இருந்தாலும், அணியை வெற்றிப் பெறச் செய்ததில் முக்கிய பங்கு ஹாலண்டுக்கே சேரும். இந்த உலகக்கோப்பைத் தொடரில் நார்வே அணி சார்பில் அடிக்கப்பட்ட 12 கோல்களில் 7 கோல்கள் ஹாலண்டின் கால்கள் கொடுத்தவை.
எனவே, ஹாலண்ட் நார்வே அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரராகப் பார்க்கப்படுகிறார்.
’வைக்கிங்ஸ் ரோ’ கொண்டாட்டத்தின் மூலம் நார்வே நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் விளையாட்டு மீதான காதலை உலகின் அனைத்து நாடுகளும் கொண்டாடி வருகின்றனர்.
Summary
Viking warrior Haaland! What is the story behind Norway's victory celebration?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










