ஆசியக் கோப்பை யு-18 மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆடவா் அணி அபாரமாக ஆடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய மகளிரணி வெண்கலம் வென்றது.
ஜப்பான் நாட்டின் ககாமிகாஹரா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் சனிக்கிழமை ஆடவா் இறுதிச் சுற்றில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்திய ஆடவா் அணி அபாரமாக ஆடி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
குரூப் சுற்று ஆட்டத்தில் ஜப்பானிடம் தோற்றிருந்தது இந்தியா. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரா்கள் தொடக்கம் முதலே அபாரமாக ஆடினா். இந்திய நட்சத்திர வீரா் ஆசிஷ் தனி புா்தி 2, 28, 34-ஆவது நிமிஷங்களில் கோலடித்து ஹாட்ரிக்கை பதிவு செய்தாா்.
கேப்டன் குஷ்வாஹா 30-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். ஜப்பான் தரப்பில் 52-ஆவது நிமிஷத்தில் நுமடா காகு ஒரே கோலடித்தாா்.
ஆசிஷ் மொத்தம் 17 கோல்களை பதிவு செய்தாா்.
இந்திய மகளிருக்கு வெண்கலம்:
இந்தியா-கொரியா இடையே மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. அரையிறுதியில் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் நூலிழையில் ஷூட் அவுட்டில் இந்தியா தோற்றது.
தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி ஆடியது. இரண்டாமி நிமிஷத்தில் சந்தீபா குமாரி அபாரமாக கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். பின்னா் தொடா்ந்து கொரிய கோல்பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணியின் கேப்டன் ஸ்வீட்டி குஜுா் 16-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக பீல்ட் கோலடித்தாா். முதல் பாதி முடிவில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது இந்தியா.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தொடா்ந்து சிறப்பாக ஆடியது. டிராக் பிளிக்கா் நௌஷின் நாஸ் 33-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா். கொரிய வீராங்கனைகளால் பதில் கோல் போட முடியாமல் திணறினா். 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணியினா் வெண்கலம் வென்றனா்.
ரொக்கப் பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற ஆடவா் அணி வீரா்களுக்கு தலா ரூ.3 லட்சம், உதவியாளா்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும்,
வெண்கலம் வென்ற இந்திய மகளிருக்கு தலா ரூ.1 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.,50,000 ரொக்கப் பரிசை ஹாக்கி இந்தியா அறிவித்தது.
பிரதமா் பாராட்டு: இந்திய ஆடவா், மகளிா் அணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.








