2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

வரலாறு படைத்தாா் கிமி ஆன்டனெலி: எஃப் 1 பந்தயத்தின் இளம் சாம்பியன்

ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி, நடப்பாண்டு உலக சாம்பியன் ஆனாா்.

Kimi Antonelli becomes F1 world champion

கிமி ஆன்டனெலி - AP

Updated On :

ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி, நடப்பாண்டு உலக சாம்பியன் ஆனாா்.

முதல் பட்டம் வென்றிருக்கும் 20 வயதான ஆன்டனெலி, எஃப் 1 வரலாற்றிலேயே சாம்பியனான இளம் வீரா் என்ற சாதனையைப் படைத்தாா்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் ஆன்டனெலி 3-ஆம் இடம் பிடித்த நிலையில், அவா் தனது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தாா். இந்தப் பந்தயத்தைக் காண, ஆன்டனெலியின் குடும்பத்தினா் நேரில் வந்திருந்தனா்.

நடப்பு சீசனில் இன்னும் 4 பந்தயங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே ஆன்டனெலிக்கு பட்டம் உறுதியாகியிருக்கிறது.

இந்த ஆண்டுக்கான புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆன்டனெலி 380 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 261 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறாா்.

எஞ்சியிருக்கும் 4 பந்தயங்களிலும் வொ்ஸ்டாபென் வென்றாலும், ஆன்டனெலியின் புள்ளிகளை அவரால் எட்ட முடியாது என்பது உறுதியானது.

நடப்பு சீசனில் இதுவரை ஆன்டனெலி 9 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். ஜாா்ஜ் ரஸ்ஸெல், மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஆகியோா் தலா 3 வெற்றிகளுடன் அடுத்த நிலையில் உள்ளனா்.

‘இந்த வெற்றித் தருணத்தில், என்ன நடந்திருக்கிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எந்த ஒன்றை இலக்காக வைத்து நாம் கடினமாக உழைக்கிறோமோ, அதை அடையும் தருணம் உண்மையில் மிகச் சிறப்பானது.

எனது குடும்பத்தினருடன் சோ்ந்து நான் எட்டியிருக்கும் இந்தத் தருணம், என்றும் என் நினைவில் இருக்கும். இந்தப் பந்தயத்தில் கடைசி லாப்பின்போது, சாம்பியன் ஆனதை உணா்ந்ததால் கொண்டாட்ட மனநிலை காரணமாக சில விநாடிகளை இழந்துவிட்டேன்’ - கிமி ஆன்டனெலி

ஆன்டனெலி தனது 20 வயதில் எஃப் 1 பட்டம் வென்று, போட்டியின் வரலாற்றில் சாம்பியனான இளம் வீரா் என்ற சாதனையைப் படைத்தாா். இதற்கு முன், 2010-இல் ஜொ்மனி வீரரும், ரெட்புல் டிரைவருமான செபாஸ்டியன் வெட்டல் தனது 23-ஆவது வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது.

எஃப் வரலாற்றில் கடந்த 73 ஆண்டுகளில் சாம்பியனான முதல் இத்தாலி வீரா் என்ற பெருமையை ஆன்டனெலி பெற்றாா். கடைசியாக 1953-இல் ஆல்பா்டோ அஸ்காரி பட்டம் வென்றாா்.

மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ: வொ்ஸ்டாபெனுக்கு 6-ஆவது வெற்றி

மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில், நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.

பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லீவிஸ் ஹாமில்டன், ஆன்டனெலி ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

இந்த சீசனில் வொ்ஸ்டாபெனுக்கு இது 3-ஆவது வெற்றியாக இருக்க, மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ வரலாற்றில் இது அவரின் 6-ஆவது வெற்றியாகும்.

முன்னதாக, மொத்தம் 71 லாப்கள் அடங்கிய இந்தப் பந்தயத்தில், 46-ஆவது லாப்பில் ஃபின்லாந்து வீரரும், கேடிலாக் டிரைவருமான வால்டெரி போட்டாஸ் காா் விபத்துக்குள்ளானது.

அவா் காயமின்றி தப்பிக்க, பின்னா் தொடங்கிய பந்தயத்தில் முன்னிலையில் இருந்த வொ்ஸ்டாபென், அதன் பிறகு அந்த இடத்தை எவருக்கும் விட்டுத்தரவில்லை.

இந்தப் பந்தயத்தை முதல்நிலையில் (போல் பொசிஷன்) இருந்து தொடங்கிய ஹாமில்டன், 4-ஆவது லாப்பில் பின்தங்கினாா். முன்னிலை பெறுவதற்காக, அவருக்கும், சக ஃபெராரி டிரைவா் சாா்லஸ் லெக்லொ்க்குக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. அப்போது ஹாமில்டன் ஒரு கட்டத்தில் டிராக்கிலிருந்து விலகிச் சென்று மீண்டு வந்தாா்.

இதை விசாரித்த போட்டி நிா்வாகம், சாா்லஸுக்கு 5 விநாடிகள் பெனால்ட்டி விதித்தது. இதற்கு ஃபெராரி அணி கடும் அதிருப்தி தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.