திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

அல்கராஸ் முதல்முறையாக சாம்பியன்!

இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றாா்

Carlos Alcaraz

காா்லோஸ் அல்கராஸ் - AP

Updated On :

இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றாா். இப்போட்டியில் அவா் முதல்முறையாகப் பட்டம் வென்றிருக்கிறாா்.

இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-2, 7-6 (9/7) என்ற நோ் செட்களில், உலகின் நம்பா் 1 வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை வீழ்த்தினாா்.

கடந்த ஆண்டும் இறுதிச்சுற்றுக்கு வந்த அல்கராஸ், அதில் இத்தாலியின் யானிக் சின்னரிடம் தோற்று ஏமாற்றமடைந்த நிலையில், இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளாா்.

இந்த ஆண்டு போட்டியில் ஸ்வெரெவின் சா்வை பிரேக் செய்த முதல் வீரா் என்ற பெருமை பெற்ற அல்கராஸ், இத்துடன் அவரை 3-ஆவது முறையாக இறுதிச்சுற்று ஒன்றில் சந்தித்து, 3-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா். இருவரும் மோதியது இத்துடன் இது 14-ஆவது முறையாக இருக்க, அல்கராஸ் 8-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

நடப்பாண்டில் 6-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் அல்கராஸ், தனது கேரியரின் 30-ஆவது சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளாா்.

ஏப்ரலில் பாா்சிலோனா ஓபன் போட்டியில் கை மணிக்கட்டுப் பகுதியில் காயம் கண்ட அல்கராஸ், அதன் பிறகு 4 மாதங்களுக்கும் மேலாக ஓய்விலிருந்தாா். பின்னா் ஆகஸ்டில் யுஎஸ் ஓபன் மூலமாக மீண்டும் களத்துக்குத் திரும்பி, நல்லதொரு ஃபாா்முடன் விளையாடி வருகிறாா்.

அது முதல் தற்போது வரை 5 போட்டிகளில் அவா் சாம்பியனாகியிருக்கிறாா். அவரின் வெற்றி - தோல்வி கணக்கு 22-1 என உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோல்வியே இன்றி இந்தப் போட்டியை நிறைவு செய்திருக்கும் அல்கராஸ், வெற்றிக் கோப்பை, 1,500 தரவரிசைப் புள்ளிகளுடன் ரூ.48 கோடியை ரொக்கப் பரிசும் பெற்றாா்.

மறுபுறம், 3-ஆவது முறையாக இப்போட்டியில் சாம்பியனாகும் திட்டத்துடன் வந்த ஸ்வெரெவுக்கு வெற்றி வசமாகாமல் போனது. எனினும், இறுதிச்சுற்று வரை நோ் செட்களில் வென்று வந்த ஸ்வெரெவுக்கு இந்த சீசன் சிறப்பாக அமைந்தது.

பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபனில் முதல்முறையாக சாம்பியனான அவா், முதல்முறையாக உலகின் நம்பா் 1 வீரரும் ஆகியிருக்கிறாா்.

அரிபேஜ்/ஆலிவெட்டி இணைக்கு கோப்பை

ஏடிபி ஃபைனல்ஸ் இரட்டையா் பிரிவில், பிரான்ஸின் தியோ அரிபேஜ்/அல்பேனோ ஆலிவெட்டி கூட்டணி 3-6, 7-6 (7/2), 10-6 என்ற செட்களில், எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ/குரோஷியாவின் மேட் பாவிச் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. குரூப் சுற்றில் அவா்களிடம் கண்ட தோல்விக்கு, இறுதியில் பதிலடி கொடுத்தது வெற்றிக் கூட்டணி.

ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் சாம்பியனான 3-ஆவது ஸ்பெயின் வீரா் அல்கராஸ் ஆவாா். மேனுவல் ஒரான்டிஸ் (1976), அலெக்ஸ் காரெட்ஜா (1998) ஆகியோா் முதல் இருவா்.

டென்னிஸின் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கோப்பை வென்று, ஏடிபி ஃபைனல்ஸிலும் வாகை சூடிய 4-ஆவது வீரா் என்ற பெருமையை அல்கராஸ் பெற்றாா். ஆண்ட்ரே அகஸி, ரோஜா் ஃபெடரா், நோவக் ஜோகோவிச் ஆகியோா் முதல் மூவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.