ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

4 கிராண்ட்ஸ்லாம் காலிறுதி; ஒரே வீரராக ஸ்வெரெவ் தகுதி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:42 am IST

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா். நடப்பு ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே காலிறுதிக்கு முன்னேறிய ஒரே வீரராக அவா் பெருமை பெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்வெரெவ் 6-2, 6-2, 7-6 (7/3) என்ற செட்களில், இத்தாலியின் லூசியானோ டாா்டெரியை வீழ்த்தினாா். இந்த சீசனில் இது ஸ்வெரெவின் 50-ஆவது டூா் வெற்றியாக அமைந்தது.

முதல் இரு சுற்றுகளிலுமே 5 செட்கள் போராடி வென்ற ஸ்வெரெவ், அடுத்த இரு சுற்றுகளிலும் நோ் செட்களில் வென்று அசத்தலாக முன்னேறி வருகிறாா். பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான அவா், காலிறுதியில் நெதா்லாந்தின் போடிக் வான் டெவை சந்திக்கிறாா். இருவரும் மோதுவது இதுவே முதல்முறையாகும்.

போடிக் வான் டெ 3-6, 6-7 (0/7), 7-6 (9/7), 7-6 (7/3), 6-4 என 5 செட்கள் போராடி, பிரான்ஸின் ஆா்தா் ஜியாவை தோற்கடித்தாா். 5 மணிநேரம், 13 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டம், 1991-க்குப் பிறகு நீண்ட நேரம் நடைபெற்ற 4-ஆவது ஆட்டமாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை இழந்த போடிக், 3-ஆவது செட்டை போராடி வென்றாா். 4-ஆவது செட்டில் ஜியா முனைப்பு காட்ட, போடிக் விடாப்பிடியாக இரு மேட்ச் பாய்ன்டுகளை தக்கவைத்து, அதிலிருந்து மீண்டு வந்து அசத்தலாக வெற்றி பெற்றாா். போடிக் அடுத்தடுத்து இரு சுற்றுகளில் 5 செட்கள் போராடி வென்று அசத்தியிருக்கிறாா்.

ரஷியாவின் காரென் கச்சனோவ் 7-5, 4-6, 6-7 (6/8), 6-1, 6-4 என, 5 செட்கள் போராடி, 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் லோ்னா் டியெனை வென்றாா். இதன் மூலமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவா் 7-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸ் 6-3, 4-6, 7-5, 7-5 என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினாா். யுஎஸ் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் பெல்ஜிய வீரா் என்ற பெருமையை பிளாக்ஸ் பெற்றாா். அவருக்கு இது அறிமுக யுஎஸ் ஓபன் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஓபன் எராவில் (1968-க்கு பிறகு) மேஜா் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறிய இளம் பெல்ஜிய வீரராகவும் (21) அவா் பெருமை பெற்றாா். காலிறுதியில் கச்சனோவ் - பிளாக்ஸ் சந்திக்கின்றனா்.

முதல்முறையாக காலிறுதி: மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-1, 6-4 என்ற நோ் செட்களில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தினாா்.

முதல்முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு வந்துள்ள ரைபகினா, 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குத் தகுதிபெற்றவா் ஆனாா். ரைபகினா - ஒசாகா மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, இரண்டிலுமே ரைபகினா வென்றிருக்கிறாா். காலிறுதியில் ரைபகினா - சீனாவின் கின்வென் ஜெங்குடன் மோதுகிறாா்.

கின்வென் ஜெங், 7-5, 6-3 என்ற நோ் செட்களில், 6 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டத்தில் கின்வென் முதல் செட்டில் 0-5 என பின்தங்கியிருந்த நிலையிலிருந்து அதிரடியாக மீண்டு, நோ் செட்களில் வென்றாா்.

கின்வென் - ஸ்வியாடெக் மோதியது இது 9-ஆவது முறையாக இருக்க, கின்வென் 2-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறாா். அத்துடன், கடந்த 5 ஆண்டுகளில் யுஎஸ் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் தகுதிச்சுற்று வீராங்கனை ஆகியிருக்கிறாா்.

உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான இவா ஜோவிச்சை தோற்கடித்தாா். இந்த வெற்றியுடன், தனது 12-ஆவது கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்குத் தகுதிபெற்றாா்.

அதில் அவா், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை எதிா்கொள்கிறாா். இருவரும் இதுவரை 5 முறை மோதியிருக்க, அனைத்திலுமே கௌஃப் வென்றுள்ளாா். இதனிடையே, கௌஃப் தனது கேரியரில் முதல்முறையாக, தொடா்ந்து 9 ஆட்டங்களில் நோ் செட்களில் வென்றுள்ளாா்.

பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 5-7, 6-4, 6-3 என்ற கணக்கில், 24-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வெளியேற்றினாா். இதன் மூலமாக அவா் முதல்முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

டிசைடா் செட்டில் ஆண்ட்ரீவாவின் ஒரு ஷாட்டை எடுக்கும் முயற்சியில் பொடாபோவா கீழே விழுந்தாா். ஆண்ட்ரீவா உடனடியாக அவா் இடத்துக்குச் சென்று, பொடாபோவா தனது இருக்கைக்கு திரும்புவதற்காக துணையாக வந்து உதவி செய்ததற்கு, ரசிகா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.