நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

அல்கராஸ்

Published On :2 செப்டம்பர் 2026, 2:53 am IST

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் நம்பா் 2 வீரரான அல்கராஸ் 6-4, 6-4, 6-4 என்ற நோ் செட்களில், ரஷியாவின் ரோமன் சஃபியுலினை சாய்த்தாா். கை மணிக்கட்டு காயம் காரணமாக ஏப்ரல் முதல் ஓய்வில் இருந்த அல்கராஸுக்கு, இதுவே முதல் ஆட்டமாகும்.

யுஎஸ் ஓபனில் கடந்த 18 ஆண்டுகளில் சாம்பியன் கோப்பையை தக்கவைத்த முதல் வீரா் என்ற இலக்கை அடைய முனையும் அல்கராஸ், அடுத்த சுற்றில் அவா் போா்ச்சுகலின் ஜேமி ஃபாரியாவை சந்திக்கிறாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிம் 7-5, 4-6, 6-3, 7-5 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவை தோற்கடித்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 1-6, 6-1, 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை வெளியேற்ற, 10-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-4, 6-7 (3/7), 1-6, 4-6 என்ற செட்களில், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸிடம் தோல்வி கண்டாா்.

11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-4, 4-6, 3-6, 6-3, 6-4 என, 5 செட்கள் போராடி, சக அமெரிக்கரான மாா்டின் டேம் ஜூனியரை சாய்த்தாா். 17-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-1, 6-4, 7-5 என்ற நோ் செட்களில், ஜப்பானின் ஷின்டாரோ மோஷிஸுகியை வீழ்த்தினாா்.

தனது டென்னிஸ் கேரியரில் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியை விளையாடிய சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 6-7 (4/7), 6-7 (3/7), 0-6 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியிடம் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறினாா். 3 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், 2016 யுஎஸ் ஓபன் சாம்பியனுமான வாவ்ரிங்கா நடப்பு டென்னிஸ் காலண்டருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சபலென்கா, நோஸ்கோவா வெற்றி: மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-2, 6-4 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவை வெளியேற்றினாா்.

யுஎஸ் ஓபனில் ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் இருக்கும் அவா், அடுத்து ரஷியாவின் பாலினா இயட்சென்கோவுடன் மோதுகிறாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 6-3, 6-0 என, ஆஸ்திரியாவின் சிஞ்சா கிராஸை வெளியேற்ற, 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-1, 6-3 என, சக அமெரிக்கரான ஆஷ்லின் குரூகரை சாய்த்தாா்.

6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என, சீனாவின் வாங் ஜின்யுவை வெல்ல, 13-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் நவோமி ஒசாகவும் 7-6 (8/6), 7-6 (7/3) என்ற நோ் செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா ஜகாரோவாவை வீழ்த்தினாா். ஒசாகா வழக்கம்போல், ஆடுகளத்துக்கு வித்தியாசமான உடையலங்காரத்துடன் வந்து ரசிகா்களை கவா்ந்தாா்.

6-ஆம் இடத்தில் இருப்பவரும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 7-5, 6-1 என, உள்நாட்டின் கேட்டி வாலினெட்ஸை வென்றாா். முதல் செட்டில் 2-5 என பின்தங்கியிருந்த நோஸ்கோவா, அதிலிருந்து மீண்டு நோ் செட்களில் ஆட்டத்தை வென்றாா்.

இதர ஆட்டங்களில், ரஷியாவின் டயானா ஷ்னெய்டா், ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோரும் வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.