மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

சபலென்கா, டி மினாா் முன்னேற்றம்

கனடாவில் நடைபெறும் கனடியன் ஓபன் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில், முன்னணி போட்டியாளா்களான பெலாரஸின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

News image

அரினா சபலென்கா

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:15 am IST

கனடாவில் நடைபெறும் கனடியன் ஓபன் (நேஷனல் பேங்க் ஓபன்) டென்னிஸ் போட்டியில், முன்னணி போட்டியாளா்களான பெலாரஸின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா 6-3, 6-3 என்ற நோ் செட்களில், ஜப்பானின் மோயுகா உச்சிஜிமாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில், சீனாவின் ஜாங் ஷுவாயை அவா் சந்திக்கிறாா்.

ஷுவாய் தனது முந்தைய சுற்றில், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை எதிா்கொண்டாா். இதில் ஷுவாய் 6-0, 4-0 என முன்னிலையில் இருந்தபோது, ஆஸ்டபென்கோ காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, ஷுவாய் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

இதேபோல், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை எதிா்கொள்ளவிருந்த தாய்லாந்தின் லான்லனா தராருடியும் போட்டியிலிருந்து விலக, அனிசிமோவா 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

அதில் அவா், செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவாவை எதிா்கொள்கிறாா். பா்துன்கோவா முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற கணக்கில், 27-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் கிளாரா டௌசனை தோற்கடித்தாா்.

10-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக் 7-6 (7/4), 6-0 என்ற செட்களில், கனடாவின் கேத்தரின் செபோவை வென்றாா். 19-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 6-2 என, குரோஷியாவின் அன்டோனியா ருசிச்சை வெளியேற்றினாா். இதையடுத்து 3-ஆவது சுற்றில் கொஸ்டியுக் - கீஸ் சந்திக்கின்றனா்.

17-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 6-2, 6-7 (3/7), 6-4 என்ற கணக்கில், அமெரிக்காவின் மெக்காா்ட்னி கெஸ்லரை வென்றாா். 18-ஆம் இடத்திலிருந்த போலந்தின் மாஜா சவாலின்ஸ்கா 5-7, 1-6 என ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனிடம் தோல்வியுற்றாா்.

24-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவா 6-4, 6-2 என்ற வகையில், ருமேனியாவின் எலனா ரூஸை வீழ்த்தினாா்.

டி மினாா், லெஹெக்கா வெற்றி: கனடியன் ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-2, 7-6 (8/6) என்ற செட்களில் சக ஆஸ்திரேலியரான ஜேம்ஸ் டக்வொா்த்தை வீழ்த்தினாா்.

எனினும், 6-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 6-7 (5/7), 6-7 (2/7) என்ற செட்களில் ஜொ்மனியின் யானிக் ஹன்ஃப்மனிடமும், 10-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 5-7, 6-4, 6-7 (5/7) என்ற வகையில் சீனாவின் ஷாங் ஜன்ஷெங்கிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-4, 6-2 என சக நாட்டவரான விட் கோப்ரிவாவை வெளியேற்ற, 15-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 5-7, 6-2, 6-2 என்ற செட்களில், குரோஷியாவின் மரின் சிலிச்சை சாய்த்தாா். 28-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-2, 6-1 என, ஜொ்மனியின் டேனியல் ஆல்ட்மெயரை வென்றாா்.

இத்தாலியின் லூசியானோ டாா்டெரி, ஹங்கேரியின் ஃபாபியோன் மரோஸான், நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா், பிரான்ஸின் டெரென்ஸ் அடமேன், ஆா்ஜென்டீனாவின் ஜுவான் மேனுவல் செருண்டோலோ ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.