/

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெகுலா, பென்சிச், ஒசாகா

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், ஜெஸ்ஸிகா பெகுலா, பெலிண்டா பென்சிச், நவோமி ஓசாகா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

Updated On :4 ஜூலை 2026, 2:34 am IST

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், ஜெஸ்ஸிகா பெகுலா, பெலிண்டா பென்சிச், நவோமி ஓசாகா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பெகுலா 6-1, 6-3 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வீழ்த்தினாா். 11-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பென்சிச் 6-4, 4-6, 7-6 (10/6) என்ற கணக்கில், 19-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை வென்றாா்.

14-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் ஒசாகா 6-1, 6-3 என மிக எளிதாக, ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினாவை சாய்த்தாா். 16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச் 6-3, 3-6, 6-4 என்ற வகையில், 18-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை தோற்கடித்தாா்.

இதனிடையே 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-1, 6-2 என அமெரிக்காவின் கேட்டி மெக்னாலியை வெல்ல, 6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-2, 4-6, 7-6 (10/3) என்ற செட்களில், சக அமெரிக்கரான சோஃபியா கெனினை வெளியேற்றினாா்.

இது தவிர, 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, 13-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கிரீஸின் மரியா சக்காரி, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

ஸ்வெரெவ், கோபோலி முன்னேற்றம்: ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-1, 6-3, 7-6 (7/3) என்ற செட்களில் பிரான்ஸின் வாலென்டின் ராயரை வென்றாா்.

9-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 7-6 (7/4), 3-6, 7-6 (7/3), 6-1 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த்தை வீழ்த்தினாா். 10-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 6-3, 6-4, 7-6 (7/5) என்ற வகையில், பிரான்ஸின் கிரியன் ஜாக்கெட்டை வென்றாா்.

15-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-7 (5/7), 6-4, 5-7, 3-6 என்ற கணக்கில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவிடம் தோல்வியுற, 20-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 4-6, 5-7, 6-3, 3-6 என, இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியம் வீழ்ந்தாா்.

அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ, செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, ரஷியாவின் காரென் கச்சனோவ் ஆகியோரும் 2-ஆவது சுற்றில் வெற்றி கண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.