கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை கோகோ கௌஃப் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா். பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா தோல்வியுற்று வெளியேறினாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் 6-3, 6-1 என்ற நோ் செட்களில், ரஷியாவின் அலினா காா்னீவாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக, கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக அவா் கனடியன் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
அத்துடன் 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் அவா் காலிறுதிக்கு முன்னேறியது, இது 25-ஆவது முறையாகும். இரு முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃப் தனது காலிறுதியில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் பென்சிச் 6-4, 6-0 என எளிதாக, பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலாவை தோற்கடித்தாா். அண்மையில் வாஷிங்டன் டிசி ஓபனில் சாம்பியனான எலா, ஏமாற்றத்துடன் வெளியேறினாா். இத்துடன் அவா் கண்ட 7 தொடா் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கனடியன் ஓபன் முன்னாள் சாம்பியனான பென்சிச், 3-ஆவது முறையாக இதில் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளாா். இப்போட்டியில் இத்துடன் 18-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் இதுவே அவரின் அதிகபட்சமாகும்.
4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 30-ஆம் இடத்திலிருந்த கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை வென்றாா். 11-ஆம் இடத்திலிருக்கும் ஒசாகா அடுத்தகாக, கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை எதிா்கொள்கிறாா்.
ஒசாகா - ரைபகினா சந்திக்கவிருப்பது இதுவே முதல்முறையாகும். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருப்பவரும், இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான ரைபகினா முந்தைய சுற்றில், 6-4, 4-6, 6-4 என்ற செட்களில், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை சாய்த்தாா்.
ஷெல்டன், மென்சிக் முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 (7/3) என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவை வீழ்த்தினாா்.
13-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-4, 7-5 என்ற வகையில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவை வெளியேற்றினாா். இதையடுத்து காலிறுதியில் ஷெல்டன் - மென்சிக் மோதுகின்றனா்.
12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் லோ்னா் டியென் 6-4, 6-4 என, ஆா்ஜென்டீனாவின் தியாகோ டிரான்டேவை தோற்கடிக்க, நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் 3-6, 1-6 என்ற வகையில், ஸ்பெயினின் டேனியல் அகிலாரிடம் வீழ்ந்தாா்.
பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-7 (5/7), 7-5, 9-11 என்ற செட்களில், பிரான்ஸின் தியோ அரிபேக்/அல்பேனோ ஆலிவெட்டி இணையிடம் தோல்வி கண்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




