டி 20 கேப்டன்ஷிப்பை வெற்றியுடன் நிறைவு செய்த கோலி

அதிரடியாக விளையாடிய கே. எல். ராகுல், ரோகித் சர்மா இணை, நமிபியா அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதற அடித்தனர். 
கோலி
கோலி

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா, நமிபியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடர்ந்து, நமிபிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்டீபன் பார்ட் 21 ரன்களுக்கும் மைக்கேல் வான் லிங்கன் 14 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். டேவிட் வைஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் நமிபிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

அதிரடியாக விளையாடிய கே. எல். ராகுல், ரோகித் சர்மா இணை, நமிபிய அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதற அடித்தனர். ரோகித் 56 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாலும், பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார். இறுதியில், 15.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாகவே, கோலி அறிவித்தப்படி, சர்வதேச டி 20 போட்டியில் இதுவே அவர் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தும் கடைசி போட்டியாகும். பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில், இந்தியா அணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, டி 20 உலகக் கோப்பையிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. இருப்பினும், நமிபியா அணிக்கு எதிரான வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com