நெ.1 இடத்திலிருந்து 7-ம் இடத்துக்கு சறுக்கிய ஆஸ்திரேலிய டி20 அணி!

மே 2020. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நெ.1 அணி. முதல்முறையாக. T20 World Cup Australia
ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச்
ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச்

மே 2020. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நெ.1 அணி. முதல்முறையாக. 

அக்டோபர் 2021. டி20 தரவரிசையில் 7-ம் இடம்.

இந்தத் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவும் தொடர்களை வென்று சொந்த மண்ணில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதால் நெ. 1 இடத்துக்கு உயர முடிந்தது.  பிறகுதான் தடுமாற்றம் ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, மே.இ. தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளிடம் தோற்றது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோற்றது. தொடர்ந்து 5 டி20 தொடர்களில் தோல்வி. கடைசியாக விளையாடிய 21 ஆட்டங்களில் 6-ல் தான் வெற்றி.

இதற்குச் சில காரணங்களும் உண்டு. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது தான் அனைத்து முக்கிய ஆஸி. வீரர்களும் டி20 தொடரில் இடம்பெற்றார்கள். அதன்பிறகு பல தொடர்களில் முக்கிய வீரர்கள் இல்லாமல் பங்கேற்று தோல்வியடைந்தது ஆஸ்திரேலிய அணி. 4 தொடர்களில் வார்னர், கம்மின்ஸ் விளையாடவில்லை. 3-ல் ஸ்மித் விளையாடவில்லை. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் கடைசி இரு தொடர்களில் பங்கேற்கவில்லை. எனவே தொடர் தோல்விகளுக்கு இதை ஒரு காரணமாகக் கொள்ளலாம். 

ஆஸி. அணி ரசிகர்கள் ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 3-ம் நிலை வீரராக விளையாடி வரும் மிட்செல் மார்ஷ் அசத்தலாக விளையாடி வருகிறார். ஆனால் 3-ம் நிலை வீரராக மார்ஷ் நன்றாக விளையாடுவதால் அவருக்குப் பின்னால் களமிறங்க வேண்டிய நிலைமையில் ஸ்டீவ் ஸ்மித்தும் மேத்யூ வேடும் உள்ளார்கள். 4-ம் நிலை வீரராக மேக்ஸ்வெல் களமிறங்குவார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாட ஸ்டாய்னிஸை நம்பியுள்ளது. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. 5 பந்துவீச்சாளர்கள் தேவை எனும்போது ஸ்டாய்னிஸுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். 

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

2019-20-ல் நெ.1 அணியாக இருந்தபோது 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி அந்த உயரத்தை ஆஸி. அணி எட்டியது. அதனால் ஸ்டார்க், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸாம்பா, அகர் ஆகியோர் ஆஸி. அணியில் பந்துவீச்சாளர்களாக இடம்பெறலாம். இதனால் ஸ்டாய்னிஸுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால் 7-ம் நிலை பேட்டராக கம்மின்ஸ் அல்லது அகர் களமிறங்க வேண்டியிருக்கும். இந்த மாற்றங்களால் ஆஸி. அணியின் பேட்டிங் பலவீனமாகிவிடுமோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இலக்கை விரட்டுவதில் ஆஸி. அணி பலமுறை தடுமாறியிருப்பதால் ஸ்டாய்னிஸை அணியிலிருந்து நீக்குவதில் ஆஸி. அணி யோசித்து செயல்படவேண்டிய நிலைமையில் உள்ளது. 

ஆஸி. அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும் ஃபிஞ்சும் களமிறங்கவுள்ளார்கள். இவர்களில் ஒருவர் ரன்கள் அடிக்கத் தொடங்கினாலும் பின்னால் வரும் மார்ஷ், மேக்ஸ்வெல்லுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அவர்களால் இயல்பாக விளையாட முடியும். 

ஒருநாள் உலகக் கோப்பையை 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணி, இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. மூன்று முறை மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2010-ல் 2-ம் இடம். முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று கணக்கைத் தொடங்குமா ஆஸி. அணி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com