டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி எப்படி விளையாடி வருகிறது?

கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருப்பது உண்மையிலேயே இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி எப்படி விளையாடி வருகிறது?

2016 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்தது. 

அதன்பிறகு 24 டி20 தொடர்களிலும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடியது. 

இலங்கையில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய டி20 போட்டியை இந்தியா வென்றது. (தினேஷ் கார்த்திக் சிக்ஸர் ஞாபகம் இருக்கிறதா?)

மே.இ. தீவுகளிடம் இருமுறை, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகத் தலா ஒருமுறை தோற்றுப் போயிருக்கிறது. மூன்று டி20 தொடர்கள் சமன் ஆகியுள்ளன. 

2016 முதல் 16 டி20 தொடர்களை வென்றுள்ளது. 

2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோற்றது. அதன்பிறகு 8 டி20 தொடர்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற 2-ம் கட்ட இந்திய அணி டி20 தொடரில் தோற்றது. 

2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி விளையாடிய 72 ஆட்டங்களில் 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 66% வெற்றி.

கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி மிகச்சிறந்த டி20 அணியாக உள்ளது. 

2017-ல் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதால் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், வெள்ளைப் பந்து கேப்டனாக நியமிக்கப்பட்டார் விராட் கோலி. முதல் டி20 தொடரை 2-1 என வென்று காண்பித்தார். 

கோலியின் தலைமையில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் இந்திய அணி டி20 தொடர்களை வென்றுள்ளது. வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் (தோனி) இந்தப் பெருமை இல்லை. 

டி20 கிரிக்கெட்டில் வலுவான இரு அணிகளான இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் 2017-லில் ஆரம்பித்து பல டி20 தொடர்களில் தோற்றுள்ளன. 2017 முதல் இன்று வரை இந்தியாவுக்கு எதிரான 3 டி20 தொடர்களில் இங்கிலாந்து தோற்றுள்ளது. இதுதவிர மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியாவிடமும் தலா ஒருமுறை தோற்றுள்ளது. உலக சாம்பியனான மே.இ. தீவுகள் அணி 2017 முதல் ஏகப்பட்ட டி20 தொடர்களில் தோற்றுள்ளது (ஒருமுறை ஆப்கானிஸ்தானிடமும்). 

கோலி தோற்ற டி20 தொடர்கள் மிகக்குறைவு தான். 2017-ல் மே.இ. தீவுகளில் கேப்டனாகத் தனது 2-வது டி20 தொடரில் 0-1 (1) எனத் தோற்றார் கோலி. 2019-ல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியா, 2-0 (2) என டி20 தொடரை வென்றது. அவ்வளவுதான். ஒரு டி20 கேப்டனாக 2 தொடர்களில் மட்டுமே தோற்றுள்ளார் கோலி. 

2019-ல் நியூசிலாந்து சென்று விளையாடிய 5 டி20 ஆட்டங்களிலும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2020-ல் ஒருநாள் தொடரில் தோற்றாலும் ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்று அசத்தியது இந்திய அணி. இந்த வருடம் வலுவான இங்கிலாந்து அணியைச் சொந்த மண்ணில் 3-2 என வென்றார் கோலி. 

டி20 கிரிக்கெட்டில் கோலிக்கு நிகராகச் சாதித்த இன்னொரு கேப்டன் இல்லை. வெற்றி விகிதத்தில் கோலிக்கு 2-ம் இடம் தான் என்றாலும் ஆப்கானிஸ்தான் அணி பல சிறிய அணிகளுடன் விளையாடி அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. அதனால் பெரிய அணிகளுடன் பலமுறை விளையாடி அதிக வெற்றிகளை ஈட்டியவர் கோலி மட்டுமே. வெளிநாடு, சொந்த நாடு என விளையாடிய அத்தனை இடங்களிலும் பெரும்பான்மையாக வெற்றியே அடைந்துள்ளார்.

இதனால் டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருப்பது உண்மையிலேயே இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு தான். டி20 உலகக் கோப்பையை கோலி வென்றுவிட்டால் இன்னும் சிறப்பு. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com