ஜிம்பாப்வேவைக் காப்பாற்றிய மழை: டி காக் மிரட்டல் அடி வீண்!

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
படம்: ட்விட்டர் | டி20 உலகக் கோப்பை
படம்: ட்விட்டர் | டி20 உலகக் கோப்பை


தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் இன்றைய (திங்கள்கிழமை) 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் ஹோபார்டில் விளையாடின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நிறைய நேரம் வீணானதால், இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.

80 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா களமிறங்கினர்.

முதல் ஓவரை தெண்டாய் சகாப்வா வீசினார். முதல் பந்திலிருந்தே ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கிய டி காக், முதல் ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 23 ரன்கள் விளாசினார்.

இரண்டாவது ஓவரின்போதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 7 ஓவரில் 64 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

மழைக்குப் பிறகு வீசப்பட்ட 2-வது ஓவரின் மீதமுள்ள 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசினார் டி காக். 3-வது ஓவரை சிக்கந்தர் ராசா சிறப்பாக வீசி பவுண்டரிகள் எதுவும் கொடுக்கவில்லை. எனினும், தென்னாப்பிரிக்க அணி அந்த ஓவரில் 11 ரன்கள் சேர்த்தது.

ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு அப்போது 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. 

எனினும், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால், ஜிம்பாப்வே அணி நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பியது. வெறும் 18 பந்துகளில் 47 ரன்கள் விளாசிய டி காக்கின் அதிரடியும் தென்னாப்பிரிக்காவுக்கு கைகொடுக்காமல் போனது.

இதன்மூலம், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com