
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது.
பதினோரு ஆண்டுகளாக தொடர்ந்த இந்திய அணியின் ஐசிசி தொடரின் கோப்பைக்கான தேடல் முடிவுக்கு வந்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்றவுடன், ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் விராட் கோலி முதலிடத்திலும், ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். 2007 முதல் 2024 வரை இதுவரை 47 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 1,220 ரன்கள் குவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் பல போட்டிகளில் ரோஹித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றுள் சிறந்த 5 ஆட்டங்களைக் காணலாம்.
டி20 உலகக் கோப்பை, 2007
கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்ய ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே அணிக்குத் தேவையான ரன்களை அடித்துவிட்டனர்.
அதன்பின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11 ஓவர்களுக்கு 61 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறினர். அதன்பின் களமிறங்கிய ரோஹித் சர்மா 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆண்டு உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
டி20 உலகக் கோப்பை, 2010
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் யாரும் 20 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் சேர்க்கவில்லை. அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 79 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் குவித்த 79 ரன்கள் இந்திய அணிக்கு 135 ரன்கள் என்ற ஸ்கோரை கொடுத்தது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியபோதிலும், ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
டி20 உலகக் கோப்பை, 2014
இந்த முறை இந்திய அணிக்காக ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியுடன் இணைந்து களமிறங்கினார். அவர் 52 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அசத்தினார். அந்த போட்டியில் விராட் கோலியும் 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருப்பார். அந்த போட்டியில் இந்திய அணி இரண்டு பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.
டி20 உலகக் கோப்பை, 2021
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 47 பந்துகளில் அதிரடியாக 74 ரன்கள் எடுத்து அசத்தியிருப்பார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கும்.
டி20 உலகக் கோப்பை, 2024
லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். அவர் 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் வெறும் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடியால் இந்திய அணி 205 ரன்கள் குவித்தது. அந்த போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியில் இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.