

முன்னாள் ஆஸி. அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்தியா உலகக் கோப்பை வெல்லாததுக்கு காரணம் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்காக 2003, 2007 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பையை ரிக்கி பாண்டிங் தனது தலைமையில் (கேப்டன்சியில்) வென்றிருக்கிறார். 1999இல் உலகக் கோப்பை வென்ற அணியிலும் ரிக்கி பாண்டிங் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே கடைசியாக ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. விராட் கோலி, ரோஹித் சர்மா தலைமையில் இந்தக் கனவு இன்னும் நனவாகவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் சோகத்தில் முழ்குகிறார்கள்.
இந்தியா உலகக் கோப்பை வெல்லாததற்கு காரணம் என்ன என்பது குறித்து 49 வயதான ரிக்கி பாண்டிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நேர்காணலில் கூறியதாவது:
வெளிப்புற அழுத்தங்களை எண்ணி கவலைப்படுவதையும் அடுத்து என்ன நடக்கும் என நினைப்பதையும் தவிர்த்து கையில் என்ன குறிக்கோள் இருக்கிறதோ அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியின் திறமை மீது சந்தேகமில்லை. அதேசமயத்தில் உலகக் கோப்பைகளை வெல்வது சாதாரணமில்லை.
உலகத்தின் தலைசிறந்த வீரர்கள் ஒன்றுகூடி பல்வேறு காலநிலைகளை கொண்ட ஆடுகளத்தில் விடுகிறார்கள். அதனால் மனநிலை என்பது மிகவும் முக்கியமானது.
அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள், அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதுதான் டி20யில் வெற்றி அல்லது தோல்விகளை வித்தியாசப்படுத்துகிறது.
உலகக் கோப்பையைப் பொறுத்த வரையில் உங்களது சிறந்த வீரர்கள், சரியான நேரத்தில் சரியாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணி முக்கியமான பெரிய போட்டிகளில் சரியாக விளையாடுவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.