
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸை வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா ரன் ஏதுமின்றி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களும், தனஞ்ஜயா டி சில்வா 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா நெதர்லாந்தின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு சிறப்பாக விளையாடி 21 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் 30 ரன்களுடனும், கேப்டன் வனிந்து ஹசரங்கா 20 ரன்களுடனும் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் கிங்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியால் 10 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் லெவிட், கேப்டன் ஸ்காட் எட்வர்ட் தலா 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இலங்கை தரப்பில் நுவான் துஷாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தின் அபார வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, வங்கதேச அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.