
உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேல் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேல் பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: பவர்பிளேவில் பந்துவீசுவது மிகவும் கடினம். ஆனால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரியும்போது, நாம் அசாதரணாக எதையும் செய்யத் தேவையில்லை. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதானதாக இல்லை என்பது குறித்து உடைமாற்றும் அறையில் பேசினோம். எனது பந்துவீச்சுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்டுகள் விளையாட முயற்சி செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஆடுகளம் மெதுவாக இருப்பதால் அவர்களால் ஷாட்டுகளை நினைத்ததுபோல விளையாட முடியவில்லை. அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசுவதே எனது திட்டமாக இருந்தது. அவ்வாறு பந்துவீசியதில் முதல் பந்தில் பட்லரின் விக்கெட் கிடைத்தது. முதல் பந்தில் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற திட்டமில்லை. சரியான இடத்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்க முயற்சி செய்தேன் என்றார்.
டி20 உலகக் கோப்பையில் நாளை (ஜூன் 29) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.