
டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் பாா்படாஸின் பிரிட்ஜ்டௌன் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.
ஆரம்பமே அதிா்ச்சி:
தொடக்க வீரர் கேப்டன் ரோஹித் சா்மா 9 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் டக் அவுட்டாகி வெளியேறினர். சூரியகுமாா் யாதவும் 3 ரன்களுக்கு நடையைக் கட்ட, இந்தியா 34/3 என தடுமாறிக் கொண்டிருந்தது.
கோலி-அக்ஸா் அசத்தல்:
பின்னா் இணைந்த கோலியுடன் இணைந்த அக்ஸா் படேல் சரிவில் இருந்து அணியை மீட்டார். 4 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார் அக்ஸா் படேல். தொடக்க வீரரான விராட் கோலி பொறுப்புடன் ஆடி 59 பந்துகளில் 2 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்களை விளாசினார்.இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன்களைச் சோ்த்தனா்.
ஷிவம் டுபே 1 சிக்ஸா் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் திரட்ட நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 176 ரன்களைச் சோ்த்தது.
177 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சை நாலாபக்கமும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினர். அதிலும் குறிப்பாக 27 பந்துகளில் ஹென்ரிச் க்ளாஸ்ஸன் 5 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களை விளாசினார்.
திருப்புமுனையாக அமைந்த தருணங்கள்:
ஒரு கட்டத்தில் 18 பந்துகளில்(3 ஓவர்களில்) 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலைமைக்கு ஆட்டம் சென்றது. தென்னாப்பிரிக்கா பக்கம் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்தது. இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய 18வது ஓவர் ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஜஸ்பிரித் பும்ரா மிக நேர்த்தியாக வீசிய அந்த 6 பந்துகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. 18வது ஓவரில் வெறும் இரண்டே ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது தென்னாப்பிரிக்க வீரர்களால். 18வது ஓவரில் 2 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார் பும்ரா.
அதைத்தொடர்ந்து 19வது ஓவரை நேர்த்தியாக வீசி உலகத் தரத்திலான பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.
இருக்கை நுனிக்கு இட்டுச் சென்ற இறுதி ஓவர்:
இறுதி ஓவரில், 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் மகுடம் தென்னாப்பிரிக்காவை சேரும். இந்த நிலையில், இறுதி ஓவரில் ஒரு வைட் விட்டுக்கொடுத்தாலும், பேட்ஸ்மேனின் உளவியல் எண்ண ஓட்டத்தை மிகச்சரியாக கணித்து அதற்கேற்ப பந்துவீசி இதயங்களை வென்றுவிட்டார் ஹர்திக் பாண்டியா.
அந்த ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவ் மிக லாவகமாகப் பிடித்த கேட்ச், ஒரு இன்ச் கால் நகர்ந்திருந்தால் பவுண்டரி எல்லைக் கோட்டை தொட்டிருப்பார். அபாயகரமான பேட்டரான மில்லா் சிக்ஸருக்கு அடித்த பந்தை ஓடிக்கொண்டே கையால் பிடித்த பின், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை மேலே தூக்கியெறிந்துவிட்டு, அதன் பின் மீண்டும் பந்தைப் பிடித்தது, மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
தென்னாப்பிரிக்க அணி 20 ஓவா்களில் 169/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த வெற்றியின் மூலம், 2007க்கு பின் மீண்டும் டி20 உலக சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது இந்தியா!
ஆட்ட நாயகன்: விராட் கோலி
விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் எவருக்கும் கடுகளவு ஆட்சேபனையுமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அடுத்தடுத்து மிக முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதுடன், ரன் ரேட்டையும் குறையாமல் பார்த்துக் கொண்ட விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தை இறுகப் பிடித்துக் கொண்டார் (எப்போதோ பிடித்துவிட்டார்...).
இறுதிப்போட்டியில் ஒவ்வொரு வீரரின் மகத்தான பங்களிப்பால், 13 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் மீண்டும் உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது இந்திய அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.