கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் இந்த குண்டுகரிச்சான் குடும்பத்துடன் வந்து எங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குழாய்க்குள் கூடுகட்டி குஞ்சு பொரித்துச் சென்றது. இந்த ஆண்டும் அதே மாதத்தில் மீண்டும் அதன் குரல் கேட்டவுடன் என் மனைவி வீட்டில் உள்ள சிறிய கேமராவை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டு கூரையில் அமர்ந்திருந்த குண்டுகரிச்சானை படம் பிடித்தார். அலுவலகத்திலிருந்து நான் வந்தவுடன், ""சென்ற ஆண்டு வந்த குண்டுகரிச்சான் நம் வீட்டிற்கு மறுபடியும் கூடுகட்ட வந்துள்ளது'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சென்ற வருடம் இந்த குருவி எங்கள் வீட்டிற்கு முதன்முதலில் வந்து கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து, தாய் பறவை தன் இணையுடன் மீண்டும் அதன் சொந்த இடத்திற்கு திரும்பி சென்றது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஆங்கிலத்தில் மேக்பை ராபின் Magpie Robin என்று சொல்லப்படும் இந்த குண்டுகரிச்சான் குருவிகளைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
தினமும் என் மனைவி வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்யம்போது தரை பகுதியில் நிறைய இலையுதிர்ந்த ஈர்க்குகளைப் பார்த்தார். என்னை அழைத்து இந்த இடத்தில் தினமும் இந்த குச்சிகள் இருப்பதாகவும், ஆனால் எப்படி இந்த இடத்தில் இவ்வளவு ஈர்க்குகள் வருகிறது என்று சந்தேகத்துடன் கேட்டார்.
மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து மேலே உள்ள குழாயிலிருந்துதான் இந்த ஈர்க்குள் கொட்டுகின்றன என்று கூறினார். உடனே நான் ஒரு ஏணியை எடுத்துக்கொண்டு குழாயினுள் பார்க்கும்போது ஏதோ ஒரு பறவை கூடுகட்ட முயற்சி செய்கிறது எனத் தோன்றியது.
மறுநாள் காலையில் ஒரு பறவையின் குரலை அடிக்கடி கேட்டவுடன் அங்கு சென்று பார்த்தபோது கருப்பு வெள்ளை நிறத்துடன் வாலாட்டி குருவி போன்று ஒரு பறவை இருந்தது. சற்று தூரத்தில் நின்று கூர்ந்து கவனித்தபோது அந்த பறவை ஈர்க்கு குச்சியுடன் குழாய்க்குள் மீண்டும் மீண்டும் சென்று வந்தது. அந்தக் குழாயை மொட்டை மாடியில் மழை நீர் வடிகாலுக்காக வைத்திருந்தோம்.
மாடியில் ஒரு புதிய அறையைக் கட்டும்போது குழாயின் உட்புற பக்கத்தை அடைத்துவிட்டோம். குழாய் சற்று சாய்வாக இருந்ததால் கூடுகட்ட வைத்த அனைத்து ஈர்க்குகளும் கீழே விழுந்து கொண்டே இருந்தன.
அந்த சமயத்தில் அதே வகையை சார்ந்த இன்னும் இரண்டு பறவைகளை அருகில் உள்ள முருங்கை மரத்தில் பார்த்தோம். எங்களுக்கு அந்தப் பறவைகளின் மீது ஆர்வம் ஏற்படவே, மூன்று பறவைகளையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து எங்கள் வீட்டில் உள்ள பறவை புத்தகத்தை வைத்து அந்தப் பறவைகளின் பெயர், மற்றும் அடையாளத்தை பார்த்தோம்.
அந்தப் பறவையின் பெயர் குண்டுகரிச்சான் அல்லது கருப்பு வெள்ளை குருவி என்று தெரிந்து கொண்டோம். மேலும் குண்டுகரிச்சான் குருவிகளை இமயமலை அடிவாரம் முதல் தென்னக பகுதிகள் வரை பார்க்க முடியும் என்று எழுதியிருந்தது.
ஒரு காலத்தில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் அதிகமாக இருந்த இந்தப் பறவைகள் தற்போது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் அரிதாகப் போய்விட்டன.
பறவையியல் நிபுணர் சலீம் அலி பறவைகளைப் பற்றி எழுதியுள்ள தனது புத்தகத்தில் குண்டுகரிச்சான் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதத்திற்குள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் என்றும், ஒரு கூட்டில் 3 முதல் 5 முட்டைகளை இடும் என்ற செய்திகளைத் தெரிந்து கொண்டோம். தனித்தனியாக ஆண் பறவை, பெண் பறவை ஆகியவற்றினை அடையாளம் கண்டுகொண்டோம்.
குண்டுகரிச்சான் குருவி கூடு கட்டும் விதமே சுவாரஸ்யமானது. ஆண் பறவை அருகில் உள்ள மரத்தில் உட்கார்ந்து கொண்டு யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று சமிக்ஞை செய்யும். பெண் பறவை அருகிலுள்ள ஈர்க்கு குச்சிகளை சேகரித்துக் கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கும்.
பெண் பறவை கூட்டுக்குள் செல்லும் தருணங்களில் ஆண் பறவையும் ஏற்கெனவே அதனுடன் வந்த குட்டி பறவையும் ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் காகம் போன்ற மற்ற பறவைகள் வந்தாலும் பெண் பறவைக்கு எச்சரிக்கை கொடுக்கும்.
அப்பொழுது பெண் பறவை கூட்டிற்குச் செல்லாமல் வேறு பகுதிகளில் உட்கார்ந்து கூட்டை காட்டிக் கொடுக்காமல் இருக்கும். ஒவ்வொரு முறையும் கூடுகட்ட குச்சி எடுத்து வரும்போது நேரடியாக கூட்டுக்குச் செல்லாமல் கூடு இருக்கும் இடத்திலிருந்து சற்று தூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்துவிட்டு யாரும் கவனிக்காதபோது தான் கூட்டுக்குள் செல்லும். அப்பா, அம்மாவுடன் வந்த குட்டி பறவையும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். நடுவில் காகம் போன்ற பறவைகள் குறுக்கீடு செய்தால் தந்தை பறவை சத்தமிட்டு விரட்டிவிடும்.
எங்கள் வீட்டில் குண்டுகரிச்சான் கூடுகட்டும்போது சில சிரமங்களும் ஏற்பட்டன. கூட்டுக்குள் வைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு ஈர்க்குகள் வழுக்கி கீழே விழுந்துவிடும். மறுபடியும் நூறு முறைக்கு மேல் ஈர்க்கு குச்சிகளை கூட்டுக்குள் கொண்டு சேர்க்கும். இதை ஒரு வார காலமாக கவனித்துக் கொண்டிருந்த நாங்கள் அத்தனை ஈர்க்கு குச்சிகளையும் எடுத்து ஏணியின் உதவியுடன் குழாய் கூட்டுக்குள் வைத்து, ஈர்க்கு குச்சிகள் கீழே விழாதவாறு ஒரு அட்டையை சிறு தடுப்பாக வைத்து ஒட்டினோம்.
இந்தக் குருவி மீண்டும் கூண்டுக்குள் வந்து முட்டையிடுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எப்பொழுதும் போல் மீண்டும் தாய் பறவை கூட்டுக்குள் வந்தது. ஒரு வாரம் கழித்து பார்க்கும்போது கூட்டுக்குள் மூன்று முட்டைகள் இருந்தது. அடுத்த 15 நாட்களுக்குள் கூட்டுக்குள் பறவை குஞ்சுகளின் கீச்சு குரல் கேட்டது.
தாய்ப்பறவை உணவுக்கு வெளியே சென்றிருந்த சமயம் நாங்கள் ஏணியை வைத்து கூட்டுக்குள் பார்த்தபோது 3 பறவை குஞ்சுகள் வாயைத் திறந்தபடி உணவுக்காக காத்திருந்தன. இதற்கிடையில் காகங்கள் கூட்டுக்குள் பறவை குஞ்சுகளைத் தின்பதற்கு அருகில் வரும்போதùல்லாம் ஆண்பறவை துரத்தியடித்துக்கொண்டே இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் அவ்வப்போது இந்த பறவைகளை பற்றி தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து தாய் பறவையின் குரலையும், பறவைக் குஞ்சுகளின் குரல்களையும் கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று ஒருநாள் காலை 6 மணிக்கெல்லாம் கேட்கும் அந்த கீச்சு குரல்கள் எங்களுக்கு கேட்கவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. கூட்டிற்குள் பார்த்தபோது தாய் பறவை தன் குடும்பத்தினருடன் பறந்து சென்றுவிட்டது.
மீண்டும் அடுத்த ஆண்டுக்காக காத்திருக்கத் தொடங்கினோம் நாங்கள்.
- எஸ்.தாமோதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


