ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் மெதூர் ஏரி
பொன்னேரி, ஆக. 5: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள மெதூர் ஏரியை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான


பொன்னேரி, ஆக. 5: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள மெதூர் ஏரியை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 440 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம், அப்பகுதியில் உள்ள 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் காரணமாக அப்பகுதி நிலத்தடி நீரும் உவர்ப்பு நீராக மாறாமல் உள்ளது. மெதூர் ஏரியை அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், ஏரியின் வரவு கால்வாயின் கரை மீது செம்மண் பாதை அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக வரவுக் கால்வாய் நாளடைவில் தூர்ந்து போகும் நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிப்பதும், அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறுவதும் தொடர்கதையாக உள்ளது.
இது குறித்து மெதூர் ஏரி நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில்,
ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் வரவுக் கால்வாயின் கரை மீது செங்கல் சூளை நடத்துபவர்களால் அமைக்கப்பட்டுள்ள சாலையை அகற்ற வேண்டும் எனக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (பொ) க.மோகனசுந்தரத்திடம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்துள்ளோம்.
மேலும் ஏரி ஆக்கிரமிப்புக்கு தாற்காலிகமாக தீர்வு காணாமால் நிரந்தர தீர்வு காண அவரிடம் கோரியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஏரி வரவுக்கால்வாய் கரை மீது அமைக்கப்பட்டுள்ள சாலையில் செங்கல் சூளையில் இருந்து வந்த லாரியை அப்பகுதியில் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு லாரியை அவ்வழியே செல்ல விடாமல் தடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கோட்டாட்சியர் குமார் வட்டாட்சியர் லலிதா ஆகியோர் அங்கு சென்று அந்த லாரியை அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்தனர்.
தொடரும் ஆக்கிரமிப்புகள்...
பொன்னேரி தாலுக்காவில் ஆறு மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு மணல் திருட்டு என்பது சர்வ சாதரணமாக நடைபெற்று வரும் ஒன்றாக மாறி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து செயல் பட்டால் மட்டுமே இப்பகுதிகளில் உள்ள ஆறு, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மணல் திருட்டுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...