கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மூடப்படும் பிஸியோதெரப்பி கல்லூரிகள்!

சென்னை, மே 22: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பின்மை காரணமாக ஆண்டுதோறும் ஃபிஸியோதெரப்பி பட்டப்படிப்புக் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.   பிளஸ் 2 முடித்த பிறகு நான்கரை ஆண்டு பி.பி.டி.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:28 pm

ஜே.ரங்கராஜன்

சென்னை, மே 22: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பின்மை காரணமாக ஆண்டுதோறும் ஃபிஸியோதெரப்பி பட்டப்படிப்புக் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பிளஸ் 2 முடித்த பிறகு நான்கரை ஆண்டு பி.பி.டி. ("பேச்சலர் ஆஃப் பிஸியோதெரப்பி') படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். அரசு வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்தப் படிப்பைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாகக் குறைந்து வருகிறது.

  சென்னை கே.கே. நகரில் உள்ள மறுவாழ்வு மருத்துவ மையம், திருச்சி அரசு ஃபிஸியோதெரப்பி கல்லூரி ஆகியவற்றில் மட்டுமே அரசு நிலையில் தலா 25 இடங்களுடன் பிஸியோதெரப்பி பட்டப்படிப்பு உள்ளது. சென்னை, மதுரை, சேலம் உள்பட பல ஊர்களில் 1,500 இடங்களுடன் 33 தனியார் ஃபிஸியோதெரப்பி கல்லூரிகள் உள்ளன.

  முக்கியத்துவம் குறைந்தது ஏன்? விபத்து உள்பட முடநீக்கியல் பிரச்னைகள், விளையாட்டுக் காயங்கள், பக்கவாதம், முக பக்கவாதம், தீக்காயம், இதய அறுவை சிகிச்சை பிரச்னை உள்ளவர்கள் முழுமையாக நிவாரணம் பெற ஃபிஸியோதெரப்பி உதவுகிறது. உடல் பருமனைக் குறைத்தல், கர்ப்பகால பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் ஃபிஸியோதெரப்பி உதவுகிறது.

  ஆனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 160 ஃபிஸியோதெரப்பி நிபுணர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளதால், கிராமப்புறங்களில் ஃபிஸியோதெரப்பி சேவை என்பது மிகவும் அரிதாக உள்ளது.

  அரசு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஃபிஸியோதெரப்பி பட்டப்படிப்பைத் தேர்வு செய்வது மிகவும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு தனியார் ஃபிஸியோதெரப்பி கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட 975 இடங்களில் 65 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் தலா 50 இடங்களைக் கொண்ட 8 தனியார் கல்லூரிகளில், கடந்த ஆண்டு ஒரு மாணவர்கூட சேரவில்லை.

  மூடப்படும் கல்லூரிகள்: இதைத் தொடர்ந்து சென்னை, மதுரை, மானாமதுரை, சேலம், திருச்செங்கோடு, தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரி நிர்வாகத்தினர் தங்களது ஃபிஸியோதெரப்பி கல்லூரிகளை மூடும் முடிவை எடுத்துள்ளனர். இதைத் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

தேவை அரசின் கருணை: ""பொது மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவத்துக்கு உறுதுணையாக, ""மருந்தில்லாத மருத்துவமாக'' விளங்கும் ஃபிஸியோதெரப்பி துறை அழியாமல் தமிழக அரசு காக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஃபிஸியோதெரப்பி-க்கென தனிப் பிரிவை ஏற்படுத்தி, குறைந்தபட்சம் 1,000 பணியிடங்களை உடனடியாக அரசு உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும்'' என்றார் அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தின் தலைவர் வி. கிருஷ்ணகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.