சென்னை, நவ.11: நான்கு நாள்கள் பெய்த மழைக்கே, சென்னை மாநகரில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி தருகின்றன. இதனால், சாலை விபத்துகளும், உயிர் பலிகளும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. சென்னை நகரில் நான்கு நாள்களாக கனமழை பெய்தது. இந்த மழைக்கு எல்லா பகுதிகளிலும் சாலைகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, கோடம்பாக்கம் சிவன் கோயில் தெரு, வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ஏற்கனவே இருந்த பள்ளங்கள், பெரும் குழிகளாக மாறியுள்ளன. இதுதவிர சென்னை முழுவதும் உள்ள 160-க்கும் மேற்பட்ட சாலைகளில் புதிதாக பள்ளங்கள் உருவாகியுள்ளன.
அண்ணாநகர் பிரதான சாலை (என்.எஸ்.கே. நகர்), நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சில சாலைகளில் மழை நீரில் தார் கரைந்து சிறுஞ் ஜல்லிகள் வெளிவந்துவிட்டன.
சவாலாகும் சாலைகள்... சேதம் அடைந்த சாலைகள் அனைத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவால்களாக அமைந்துள்ளன. பள்ளங்களில் திடீரென மோட்டார் சைக்கிள் இறங்கும்போது, தடுமாறி விழ நேர்கிறது.
தாற்காலிக நிவாரணமாக இந்த சாலைப் பள்ளங்களில் செங்கல் தூளை மாநகராட்சி நிர்வாகம் நிரப்பி உள்ளது.
இந்தக் கற்களும், சாலையில் பரவுவதால் இதனாலும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகே சாலைகள் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பது எப்படி...""மழைக்குப் பின்னரே எந்தெந்த சாலைகளில் தரம் குறைவான தார்க் கலவை போடப்பட்டுள்ளது என்பது தெரியவரும். மழை பெய்வதற்கு சில தினங்களுக்கு முன் சாலைகளை சீரமைப்பதும் வீண். தார்க் கலைவையின் தரத்தை உயர்த்தினால் அதிக பள்ளங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்'' என்று மாநகராட்சி அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.
மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""2003-ம் ஆண்டு சோதனை அடிப்படையில் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு சாலையில் மட்டும், தார்க் கலவையுடன் பிளாஸ்டிக் சேர்த்து சாலை போடப்பட்டது. மற்றொரு பகுதியில் தார்க் கலவையுடன், ரப்பர் சேர்த்து சாலை போடப்பட்டது.
இந்த இரண்டு சாலைகளும் வழக்கமாக போடப்படும் சாலைகளைக் காட்டிலும், நீண்ட நாள்கள் சேதமாகாமல் இருந்தன. மழையிலும் இந்தச் சாலைகள் பள்ளமாகாததோடு, வாகனங்களும் வழுக்குவது குறைந்தது. ஆனால், கூடுதல் செலவாகும் என்பதால் இந்த முறை கைவிடப்பட்டது.
ரப்பர் பொருள்களைச் சேர்த்து சாலை போடும்போது, வெடிப்புகள் ஏற்படுவது அரிதாகும். உரிய அளவில் ரப்பர் கலவையைச் சேர்த்து சாலை அமைக்கும்போது பாதிப்பு ஏற்படாது.
செலவைப் பொருட்படுத்தாமல், அதிக வாகனங்கள் செல்லக் கூடிய வழித் தடங்களில் மட்டுமாவது ரப்பர் கலவை கலந்த சாலைகள் போடப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவரும் சென்னை போன்ற பெரு நகரங்களில், நவீன உத்திகளைப் பயன்படுத்தி சாலைகளின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்'' என்றார் அவர்.
சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் எதையாவது இட்டு நிரப்பும் ""பேட்ச் ஒர்க்'' பழுதுபார்ப்பை நிறுத்த வேண்டும்.
நடுவில் சற்றே உயர்ந்தும் ஓரங்கள் சரிந்தும் தார்ச்சாலை இருந்தால் மழை நீர் சாலையோரம் செல்லும். அப்படி செல்லும் மழை நீர் வடிகாலில் விழுந்து வெளியேறும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மின்சார வாரியம், தொலைபேசித்துறை, கழிவுநீர் அகற்றல் வாரியம் என்று அரசின் வெவ்வேறு துறைகள் சாலைகளை நோண்டும்போது அங்கு உடனே வேலையை முடித்து சாலையை ஒழுங்காகச் செப்பனிடும் பழக்கத்தையும் கட்டாயமாக்க வேண்டும். இவற்றைச் செய்யாதவரை சாலைகள் பராமரிப்பு என்பது பெயரளவிலேயே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

