தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அவசரத்துக்குக் கூட உதவாத அரசு மருத்துவமனை?

ஸ்ரீபெரும்புதூர்,அக்.1.: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.   பின்னர் மேல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:58 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்,அக்.1.: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. 1965-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த காமராஜ் ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஓர் அரசு மருத்துவமனை அரம்பிக்க உத்தரவிட்டார்.

  அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் அரசு பொது மருத்துவமனை 1965-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவம் என்ற பிரிவுகளின் கீழ் நான்கு மருத்துவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் என இரண்டு ஒன்றியங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்ளில் இருந்து 100 முதல் 200 பேர் வரை தினமும் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர்.

  பின்பு 1996-ம் ரூபாய் 25 லட்சம் செலவில் எலும்பு முறிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் எலும்பு முறிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குத் தேவையான உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்கப்படாததால் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

  மேலும் அவசர சிகிச்சை பிரிவு தற்போது புறநோயாளிகளின் பிரிவாக மாறி செயல்பட்டு வருகிறது.

  சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அவ்வாறு விபத்துகளில் சிக்குபவர்கள் தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கே அதிக அளவில் அழைத்து வரப்படுகிறார்கள். அவ்வாறு விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னை அரசு மருத்துவமனைக்கோ அல்லது 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

  அவ்வாறு அழைத்து செல்லப்படும் நோயாளிகளில் பலர் செல்லும் வழியிலேயே இறந்துவிடும் துயர நிலை நிலவி வருகிறது. மேலும் மருத்துவமனையில் இரண்டு அவசரகால ஊர்திகள் உள்ளன. ஆனால் ஒரு வாகனத்துக்கு டிரைவர் இல்லாததால் அது இயக்கப்படுவதில்லை. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டு சரியான முறையில் பராமரிக்கப்படாததால் சுகாதர சீர்கேடு ஏற்பட்டு மருத்துவமனை வளாகமே தூய்மையற்ற நிலையில் உள்ளது.

  இதே நிலை நீடித்தால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் என கவலை தெரிவிக்கின்றார் ஸ்ரீபெரும்புதூர் பகுதி பொது நல ஆர்வலர் ஒருவர்.

  எனவே மருத்துவமனையில் உரிய உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை அமைத்து, அவசர சிகிச்சைப் பிரிவை விரைவில் தொடங்கி விபத்துகளில் சிக்கும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.