டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

7 ஆண்டுகளுக்கு முன் சட்டம் நிறைவேற்றம்: நிலத்தடி நீர் ஆணையம் அமைப்பது எப்போது?

சென்னை, ஏப்.21: தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்டும், நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கும் நடவடிக்கை இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.  புவி வெப்பமயமாதல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:35 am

வி.தேவதாசன்

சென்னை, ஏப்.21: தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்டும், நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கும் நடவடிக்கை இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

 புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளால் உலகெங்கும் பல சூழலியல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நீர் வளம் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 இயற்கையை கபளீகரம் செய்ததால் ஏற்பட்ட இந்த விளைவுகள் உலகையே அச்சுறுத்தி வரும் இப்போதைய நிலையில் கூட, நிலத்தடி நீர் வளத்தை சுரண்டி, கொள்ளை லாபம் பெறும் போக்கு மாறவில்லை.

 ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, காசு கொடுத்து வாங்கி, குடிநீரை பருக வேண்டும் என்பது இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் அறிந்திடாத ஒன்று. ஆன ôல், இன்று பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்களில் கூட மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை குடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தில் மட்டும் ஓர் ஆண்டில் நடைபெறும் மொத்த குடிநீர் விற்பனை ரூ.10 ஆயிரத்து 500 கோடிக்கும் மேல் என்கிறது ஒரு புள்ளி விவரம். கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கில் இந்த வியாபாரத்தில் பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

 இந்த சூழலில் சமுதாயத்தின் நீடித்த வளர்ச்சிக்கு நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியத் தேவையாக உள்ளது. இந்த நோக்கில்தான், தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 4.3.2003 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 இந்த சட்டத்தின் மிக முக்கிய அம்சம், நிலத்தடி நீர் ஆணையம் ஒன்றை ஏற்படுத்துவதே ஆகும். அத்தகைய ஆணையம் ஏற்படுத்தப்பட்டால், அதன் மூலம் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நிலத்தடி நீரை சட்டத்துக்குப் புறம்பாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

 மேலும், புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கும்போது, அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். அந்த அனுமதியை வழங்கும் அதிகாரம் நிலத்தடி நீர் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது.

 இப்போது ஆணையம் இல்லாததால், நிறுவனங்களுக்கான அனுமதி வழங்குவதில் குறிப்பிடும்படியான கட்டுப்பாடுகள் இல்லை.

 விவசாயத்துக்காக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடற்ற நிலை உள்ளது. கடந்த 2004}ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 100 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் இருந்தது. இதில் விவசாயத்துக்காக மட்டும் ஆயிரத்து 700 கோடி கன மீட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் மொத்த நிலத்தடி நீர் இருப்பில், 85 சதவீதத்துக்கும் மேல் பயன்படுத்தப்பட்டதாக சென்னை தரமணியில் உள்ள நிலத்தடி நீர் ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 142 ஒன்றியங்கள் 100 சதவீத அளவுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தியுள்ளன. நிலத்தடி நீரை கட்டுப்பாடற்ற வகையில் உறிஞ்சுவதால் கடல் நீர் உள்ளே புகும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அண்மைக் கால ஆய்வுகளின்படி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, திருமருகல், வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 8 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் முழுமையாக உப்பு நீராக மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.

 இது போன்ற பாதிப்புகள் தொடர்வதை தடுக்க, நிலத்தடி நீர் மேலாண்மைக்கான உறுதியான நடவடிக்கைகள் தேவை. நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கப்பட்டால் மட்டுமே அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

 நிலத்தடி நீர் சட்டம் இயற்றப்பட்டு 7 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இப்போதாவது நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கப்படுமா என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.