ஆமை வேகத்தில் கடையநல்லூர் குடிநீர் திட்டப் பணிகள்
கடையநல்லூர்: விவசாயம், நெசவுத் தொழில், வெளிநாட்டுப் பணி என பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் மக்கள் வசிக்கும் கடையநல்லூரின் எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர்த் திட்ட


கடையநல்லூர்: விவசாயம், நெசவுத் தொழில், வெளிநாட்டுப் பணி என பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் மக்கள் வசிக்கும் கடையநல்லூரின் எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு அடிக்கல் நாட்டப்பட்ட புதிய குடிநீர்த் திட்டப் பணிகள், மாதங்கள் பல கடந்தும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், கடையநல்லூர் நகராட்சி மிகப்பெரிய நகராட்சியாகும். முதல்நிலை நகராட்சியான இதன் மொத்தப் பரப்பளவு 52.25 சதுர கிலோ மீட்டராகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 75,612. இப்போதைய நிலையில் மக்கள்தொகை சுமார் ஒரு லட்சமாகும்.
சுமார் 50.23 கிலோ மீட்டர் உள்சாலைகளையும், 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையையும் கொண்டுள்ள கடையநல்லூரில் மொத்த வரிவிதிப்புகள் சுமார் 22,639. இதில் 17,000 வரிவிதிப்புகள் குடியிருப்புக்களுக்கான வரி விதிப்புகளாகும். 13,000-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் இந்நகராட்சியில் உள்ளன.
1973ஆம் ஆண்டுமுதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் கடையநல்லூரில் 35 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 2003 முதல் தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டம் கடையநல்லூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல இடங்களில் பகிர்மான குழாய்களின் சீரற்ற நிலையால் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு வருகிறது.
""எனவே, குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், நகராட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்'' என பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, கடையநல்லூரில் 21.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, புதிய குடிநீர்த் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிவைத்தார். மேலும் இத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஜெர்மானிய நிதி: ஜெர்மானிய கே.எப்.டபிள்யூ. நிறுவனத்தின் நிதியுதவி மற்றும் அரசு மானியத்துடன் 21.5 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இத் திட்டத்தின் கீழ், கருப்பாநதி ஆற்றுப் பகுதியில் ஒரு தடுப்பணையும், சந்தைப் பகுதியில் ஒரு கீழ்நிலைத் தொட்டியும், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், இக்பால்நகர், கிருஷ்ணாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், பேட்டை, குமந்தாபுரம் ஆகிய 7 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும், நகரம் முழுவதும் உள்ள பிரதான குழாய்கள், பகிர்மான குழாய்கள் மற்றும் வீட்டின் இணைப்புக் குழாய்கள் உள்ளிட்ட அனைத்துக் குழாய்களும் இத் திட்டத்தின் கீழ் மாற்றப்படவுள்ளதாகவும் நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்தப் புதிய குடிநீர்த் திட்டத்தின் மூலம் கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் கடையநல்லூருக்கு கிடைக்கும் என்ற நிலையில், திட்டம் குறித்து முதற்கட்ட ஆய்வுப் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதாவது, போதிய நீர் ஆதாரம் உள்ள பகுதிகள் குறித்து முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மற்ற வகையில் திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்கள் நலன் பயக்கும் இத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...