கிராம மருத்துவப் படிப்பு தமிழகத்தில் கிடையாது
சென்னை, பிப்.7: மத்திய அரசு அறிமுகப்படுத்தும் கிராமப்புற சுகாதார நலன் பட்டப் படிப்பை (பி.ஆர்.எச்.சி) தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 13


சென்னை, பிப்.7: மத்திய அரசு அறிமுகப்படுத்தும் கிராமப்புற சுகாதார நலன் பட்டப் படிப்பை (பி.ஆர்.எச்.சி) தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 13,000 அரசு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். கிராமங்களில் மருத்துவர் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாலும், அரசு-தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஆண்டுதோறும் 4,000 பேர் எம்.பி.பி.எஸ். படித்து முடிப்பதாலும் கிராம சுகாதார நலன் பட்டப் படிப்பை தமிழகத்தில் தொடங்கத் தேவை இல்லை என அரசு கருதுகிறது.
மேலும் எம்.பி.பி.எஸ். முடித்து பதிவு செய்துள்ளவர்களில் 2006-07-ம் ஆண்டு வரை அரசுப் பணி அளிக்கப்பட்டு விட்டது என்பதால் கிராமப்புற சுகாதார நலன் பட்டப்படிப்புக்கு அவசியம் இல்லை என சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.
கிராமங்களில் மருத்துவர் காலியிடங்கள் அதிகமாக உள்ளதாலும், கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்கள் தயங்குவதாலும் கிராம மாணவர்கள் மட்டுமே சேரத் தகுதி உடைய கிராமப்புற மருத்துவப் படிப்பை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் இந்த நான்கு ஆண்டு சுகாதார நலன் பட்டப்படிப்பைத் தொடங்க அது முடிவு செய்துள்ளது.
இந்தப் படிப்பைத் தொடங்குவது குறித்து கருத்தை அறிய அனைத்து மாநிலங்களின் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்ட கூட்டம் தில்லியில் கடந்த வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறையும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.விநாயகம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
முதல் கட்டமாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், பல்வேறு மருத்துவ நல அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க, "ரூரல் எம்.பி.பி.எஸ்.' என்று அறிவிக்கப்பட்ட கிராமப்புற மருத்துவப் படிப்பின் பெயரை, "கிராமப்புற சுகாதார நலன் பட்டப்படிப்பு' ("பேச்சுலர் ஆஃப் ரூரல் ஹெல்த் கேர்') என மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பிகார், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கிராம மருத்துவ சேவை புரிய டாக்டர்களின் பற்றாக்குறை 60 சதவீதத்துக்கு மேல் உள்ளது. கிராம மருத்துவ சேவையில் இவ்வாறு 60 சதவீதத்துக்கு மேல் காலியிடங்கள் உள்ள மாநிலங்களில், கிராமப்புற சுகாதார நலன் பட்டப்படிப்பைத் தொடங்குவதற்கு இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்து, அனைத்து மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கு வழங்கியுள்ளது.
கிராம சுகாதார நலன் குறித்த பட்டப்படிப்பை தமிழகத்தில் தொடங்குவதற்கான அவசியம் இல்லை என்பதோடு, இந்தப் படிப்பை கட்டாயம் தொடங்க வேண்டும் என்று எந்த மாநிலத்தையும் மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை என்று தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...