கல் குவாரியில் கொத்தடிமைகளாக வெளிமாநிலத்தவர்
பழனி, ஜூலை 9: பழனி அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வெளிமாநில இளைஞர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததால் பட்டினியில் தவிக்கின்றனர். பழனியில் இருந்து சுமார் 25 கி.ம


பழனி, ஜூலை 9: பழனி அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வெளிமாநில இளைஞர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததால் பட்டினியில் தவிக்கின்றனர்.
பழனியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள அத்திமரத்துவலசு அருகே ஸ்ரீ உத்திரகாளியம்மன் ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் மிகப் பெரிய கல் குவாரி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் குவாரியுடன், கல் உடைக்கும் தொழிற்சாலையும் இங்கு இயங்கியுள்ளது. 2 மாதங்களாக குவாரியின் இயக்கம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல் உடைத்து க்ரஷர் ஆலையில் ஏற்றி அதை லோடு செய்யும் கடினமான பணிகளுக்கு ஆந்திரம், ஒரிசாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏஜெண்டுகள் மூலம் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சுமார் 300 முதல் 350 ரூபாய் வரை சம்பளம் என பேசி அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்குவதற்கு தகர ஷீட் பொருத்தப்பட்ட ஹாலோ பிளாக்ஸ் மூலம் கட்டப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
இந்தத் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. இதனால் இவர்களுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை கடனாகி விட்டது. இவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலையில் பட்டினி கிடக்கின்றனர். தற்போது இந்த ஆலைக்கு மின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு வேலை செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் சுதாகர் மற்றும் பலர் பொள்ளாச்சி சென்று உரிமையாளரைப் பார்த்தபோதும், தொழிலாளர்களை உரிமையாளர் சந்திக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் பழனி தொழிலாளர் நல அலுவலகத்துக்குப் பணியாளர்களுடன் சென்று கேட்டபோது, அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் திங்கள்கிழமைக்கு மேல் வாருங்கள் எனத் தெரிவித்தனராம்.
தற்போது அனைவரும் ஆளரவமற்ற அந்த ஆலையில் இருட்டில் அடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் உள்ள குவாரியிலும் கடந்த 40 நாள்களாக இதே நிலைமை ஏற்பட்டுள்ளது என அங்குள்ள தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டபோது தகவல் தெரிவித்தனர்.
கொத்தடிமைகளாக உள்ள தங்களுக்கு சம்பளத்தைக் கொடுத்தால்போதும், தமிழகம் பக்கமே வரமாட்டோம். எங்கள் குழந்தைகள், பெற்றோரைப் பார்க்காமல், பேச முடியாமல் தவித்து வருகிறோம் எனக் கூறும் இந்தத் தொழிலாளர்களை மாவட்ட உயர் அதிகாரிகள்தான் காப்பாற்ற முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...