ஒசூரில் 10 மணி நேரம் மின்நிறுத்தம்: தொழிற்துறை உற்பத்தி 50% பாதிப்பு

ஒசூர் : ஒசூரில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் தொழிற்துறையில் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கோவைக்கு அடுத்து அதிக அளவில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஒசூர் தி
ஒசூரில் 10 மணி நேரம் மின்நிறுத்தம்: தொழிற்துறை உற்பத்தி 50% பாதிப்பு
Updated on
2 min read

ஒசூர் : ஒசூரில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் தொழிற்துறையில் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கோவைக்கு அடுத்து அதிக அளவில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஒசூர் திகழ்கிறது. இங்கு சிப்காட் ஒன்று மற்றும் இரண்டு, சிட்கோ ஆகிய பகுதிகளில் பெரிய தொழில் நிறுவனங்களான அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., டைட்டான், இந்துஸ்தான் மோட்டார்ஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இவற்றைச் சார்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தத் தொழிற்சாலைகள் பொருளாதார தேக்கநிலையில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளன. உற்பத்திக்கான அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இவற்றை குறித்த காலத்துக்குள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனங்கள் உள்ளன.

சில நாள்களுக்கு முன் மின் நிறுத்த நேரம் 3 மணியிலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்படுகிறது என்ற தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் அறிவிப்புச் செய்தி தொழில்துறைக்கு ஆறுதல் அளித்தது.

ஆனால் திடீரென தற்பொழுது பகலில் 7 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் என ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் தொழில்துறையில் உற்பத்தி 50 சதவீதத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளது.

தினமும் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், பகல் 1 முதல் 2 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5 வரையிலும், இரவில் 3 மணி நேரமும் மின் நிறுத்தம் செய்யப்பபடுகிறது.

விவசாயத்துக்கு ஒரு மணி நேரம் மின்விநியோகம்:  தற்பொழுது விசாயத்துக்கு நாள்தோறும் ஒரு மணி நேரம் மட்டும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூரில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையைப் பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 5 ஹெக்டேர் நிலப்பரப்பில் காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடி செய்துள்ளனர். இந்த மின்தடையால் விளைச்சல் அதிகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.செல்வராஜியிடம் கேட்டதற்கு, தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் கூடுதல் மின் வெட்டு செய்யப்படுகிறது என்றார்.

ஆர்ப்பாட்டம் நடத்த ஹோஸ்டியா முடிவு  

10 மணி நேர மின்நிறுத்ததை கண்டித்து ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் (ஹோஸ்டியா) ஜூன் 7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் மின் பற்றாக்குறையால் தொழில் துறை நலிவடைந்துள்ளது. வங்கிக் கடனை செலுத்த முடியாமல் மூக்காண்டப்பள்ளியைத் சேர்ந்த பூபாலன் என்ற தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மின் பற்றாக்குறையால் தினமும் ரூ.2 கோடி அளவில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனவே இந்த மின்பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோஸ்டியா நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com