2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கருத்துக்களம்: மருந்துக்கு உண்டா மருந்து?

எல்லாத் தொழிலைப் போலவே, இங்கும் தொழில் போட்டி, பணத்தாசை, நிறைய லாபம் போன்ற சிறு சிறு வியாதிகள் உண்டு. ஆனால் அது காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் அளவுக்கு பெரு நோயாக மாறிப்போனது ஏன்? காரணம், மருந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:06 pm

கே.ஜெயக்குமார்

எல்லாத் தொழிலைப் போலவே, இங்கும் தொழில் போட்டி, பணத்தாசை, நிறைய லாபம் போன்ற சிறு சிறு வியாதிகள் உண்டு. ஆனால் அது காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் அளவுக்கு பெரு நோயாக மாறிப்போனது ஏன்? காரணம், மருந்துத் தொழிலில் கண்காணிப்பு இல்லை. கட்டுப்பாடு இல்லை. முக்கியமாக, வாங்கும் பொருளைப் பற்றி வாங்குபவர்க்கு எந்த ஐடியாவும் இல்லை.

நம் நாட்டில் மருந்தியல் படித்தவர்கள் மட்டும்தான் மருந்துகளைக் கையாள வேண்டும் என்ற சட்டம் புத்தகத்தில் மட்டும்தான் உள்ளது. நடைமுறையில் இல்லை. அதன் விளைவுகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

மருந்து உற்பத்தியில் ஆரம்பித்து, பகுப்பாய்வு, விநியோகம், விற்பனை வரை அனைத்துப் பிரிவுகளிலும் மருந்தியல் படிக்காமலே, யார் வேண்டுமானாலும் நுழையலாம். காரணம், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சட்டமே அதை அனுமதிக்கிறது அல்லது சட்டத்திலுள்ள ஓட்டைகள் இடம் கொடுக்கின்றன அல்லது சட்டத்தை அமலாக்குவதிலுள்ள குறைபாடு அனுமதிக்கிறது அல்லது சட்டத்தை செல்வாக்கு படைத்தோர் தங்கள் வசதிக்கேற்ப வளைப்பதால் இது நடக்கிறது.

மருந்துத் தொழிலில் போதுமான கட்டுப்பாடு இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் சமீபத்தில் கூறினார்: 45 ஆயிரம் மருந்துக் கடைகளையும், 600 மருந்து தொழிற்சாலைகளையும் கண்காணிக்க 50 மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளர்கள் தான் இருக்கிறார்களாம்.

சராசரியாக 900 நிறுவனங்களுக்கு ஓர் ஆய்வாளர். சலிக்காமல் தினம் ஒரு நிறுவனத்தில் ஆய்வு செய்தால் கூட, 3 ஆண்டுகளுக்கு ஒரு நாள்தான் ஆய்வு. சமூக விரோதிகள் புகுந்து விளையாட இது போதுமே.

மருந்து கட்டுப்பாட்டுத் துறை தன்னால் இயன்றதை செய்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் தவறு செய்யும் கூட்டம் மிகப் பெரியது. பண பலம் வாய்ந்தது. எனவே மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உடன் பலப்படுத்தியே தீர வேண்டும். குறைந்தபட்சம் இன்னும் 100 ஆய்வாளர்களாவது நியமிக்கப்பட வேண்டும்.

அடுத்து மருந்து விநியோகத் துறை. நம் நாட்டில் தான் மருந்துகள் பலசரக்குக் கடை முதல் டாக்டர்கள் கிளினிக்குகள் வரை எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதை தடுத்து, மருந்துக்கடைகளில் மட்டுமே கிடைக்குமாறும், பார்மஸிஸ்ட்கள் மட்டுமே அதை பாதுகாத்து விநியோகிக்குமாறும் செய்ய வேண்டும்.

வட நாட்டில் போலி முகவரியில் இயங்கும் மருந்துத் தொழிற்சாலைகள் டஜன் கணக்கில் உள்ளனவாம். இவை மிகவும் பிரபலமான, கோடிக்கணக்கில் விற்பனை ஆகக்கூடிய மருந்துகளை தங்கள் ரகசிய தொழிற்சாலைகளில் தயாரித்து, பிரபல நிறுவனங்களின் பெயரில் வெளியே அனுப்புகின்றனவாம். அவற்றில் 95 சதவீத மருந்து மாத்திரைகளில் வெறும் ஸ்டார்ச், டால்க் போன்ற மருத்துவக் குணம் ஏதுமில்லாத கேடு விளைவிக்காத பவுடர்கள் தான் இருக்கும். மருந்து, மருந்துக்குக்கூட இருக்காது. அவற்றை வாங்கிச் சாப்பிட்டால் எந்த பலனும் கிடைக்காது. நோய் அப்படியே நீடிக்கும் அல்லது கடுமையாகும். அப்படிப்பட்ட மருந்துகளை பாமரர்களாகிய நாம் எப்படி கண்டுபிடிப்பது? முழுக்க முழுக்க மருந்துக் கடைக்காரரைத் தானே நம்ப வேண்டியுள்ளது.

ஒவ்வொரு முறை மருந்து வாங்கும் போதும், பில் கேட்டு வாங்க வேண்டும். பில் போட்டால் வரி கொடுக்க வேண்டியது வருமே என தயங்க வேண்டியதில்லை. நாம் கொடுக்கும் விலை வரி உள்பட்டுத் தான். எனவே பில் வாங்க மறக்கக் கூடாது. டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வாங்கும் போதும், அலோபதி படிக்காத அரைகுறை டாக்டர்களிடம் வைத்தியம் செய்து கொள்ளும் போதும் போலி மருந்துகள்  தரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆங்கில மருத்துவம் படிக்காமல், ஆங்கில மருந்துகளைத் தரும், எழுதும் போலி டாக்டர்கள் தான் மேற்கண்ட போலி மருந்து வியாபாரிகளுக்கு நெருங்கிய நண்பர்கள். அவர்களின் அறியாமை இவர்களுக்கு வரப்பிரசாதம். எனவே சரியான டாக்டர்களிடம் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். கூடுமானவரை சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.