சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருத்தணியில் வெங்காயம் விலை வீழ்ச்சி

திருத்தணி,  மே 15: திருத்தணி பகுதியில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட மிக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:17 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி,  மே 15: திருத்தணி பகுதியில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட மிகக் குறைவான மழையே பெய்திருந்தது. சராசரி மழை அளவில் வெகுவாக மழை குறைந்ததால், கிணறுகளில் மற்றும் நீர்நிலைகளில் நீர் வற்றி, மனிதர்களுக்கு குடிக்க குடிநீர் மட்டுமின்றி, விவசாயத்துக்கும் செடி, கொடி மற்றும் மரங்களும் காய்ந்து கிடக்கும் நிலை காணப்படுகிறது.

நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள், கை பம்புகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. அதிலும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

தாழவேடு, தும்பிகுளம், நல்லாட்டூர், சந்தான கோபாலபுரம், பூனிமாங்காடு, கொள்ளகுப்பம், மத்தூர் பகுதி விவசாயிகள் கிணறுகளில் கிடைத்த ஓரளவு தண்ணீரைக் கொண்டு வெங்காயம் பயிர் செய்தனர். டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை செய்தனர். அப்போது 60 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.800 முதல் ரூ.1,200 வரை விலை போனது.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். இதைக் கணக்கிட்டு பெரும்பான்மையான விவசாயிகள் குறைந்தளவு வெங்காயத்தை மட்டும் டிசம்பர், ஜனவரியில் விற்பனை செய்தனர்.

தற்போது வெங்காயத்தின் விலை, அறுவடைக் காலத்தை காட்டிலும் மிகவும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி மோகன் கூறியதாவது:

கடந்தாண்டு இதே காலத்தில் மூட்டைக்கு ரூ.1,600 வரை இருந்தது. தற்போது சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவு வெங்காயம் திருத்தணி பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது.

தற்போது மூட்டைக்கு ரூ.650 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. விலை உயர்வை கணக்கிட்டு வெங்காயத்தைப் பதப்படுத்தியிருந்த விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.

ஏற்கெனவே ஈரமான வெங்காயத்தைப் பதப்படுத்தும்போது அதன் எடையில் குறைவு ஏற்படும். தற்போது விலையும் குறைந்து போனதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக மோகன் தெரிவிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.